ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா)

வாழ்வும் உழவும்
பின்னிப் பிணைந்தவன்...
வயதறியாது
ஓடி உழைப்பவன்...
ஒரு நாளும்
வெறுமை அறியாதவன்...
ஓய்வூதியம்
என்னவென்று தெரியாதவன்...

பிள்ளைக்கு அளிக்கும் சோறு,
பெற்றவன் பெற்ற கடமையாம்...
உலகிற்கு அளிக்கும் சோறு,
உழன்றவன் கொண்ட கடமையாம்...

காடு தோறும் ஓடுவான்,
உணவு செய்ய...
கயமை கொண்ட உள்ளங்கள்,
அதனை உண்ண...

உலகம் சோறு வடிக்க,
உண்டு நாடு செழிக்க,
உண்ணாமல் கண்ணீர் வடித்து,
உழைப்பால் வியர்வை வழிய,
நிலத்தோடு உறவாடுவான் எம் உழவன்...

வானம் பார்ப்பது
பூமி மட்டுமல்ல...
இப்பூமி பெற்ற
எம் உழவனும் தான்...
மழையைக் குடை கொண்டு
எதிர்க்கும் வர்க்கம் ஒன்று...
அதனை ஏங்கி
எதிர்பார்க்கும் வர்க்கம் மற்றொன்று...

நீர்ப் பஞ்சம் வந்ததனால்,
நித்தம் விளைந்த நெல்லுச் சோறும்,
நிலை இல்லாமல் போனதின்று...

நீர்க் குளங்கள் வறண்டாயிற்று,
வறண்ட நதிகள் எல்லாம் வீடாயிற்று,
மஞ்சள் விளைக்கவும் வழியில்லை,
பஞ்சமொன்றே விதையாயிற்றே...

நீர்நிலை இல்லையென்றால் என்ன...
வியர்வையோடு, உழவர் குருதியைக் குழைத்து,
உழவு செய்வார் எம் உழவுத் தோழர்...

உணவு படைத்த உழவனுக்கு,
உற்றதுணை எவரும் இல்லை...
மின்னைக் குறைக்கும் அரசும்,
விண்ணைப் பிழவா மாரியும்...

இவன் ஏறு பிடித்தால்,
ஊருக்கு சோறு போடுவான்...
இவனை ஏறி மிதித்தால்,
எவரும் உண்ண மாட்டனர், இந்நாட்டினிலே...

இல்லையென்ற போது தான்
உதவி புரிய வேண்டும்...
உணவு தரும் உழவனை
உதவிக்கரம் நீட்டவைக்க வேண்டாம்...
அவன் உரிமைகளை அறிந்து,
அதனை அளித்து,செழித்து வாழ்வோம்...!!!!

எழுதியவர் : பிரதீப் (8-Jun-12, 7:53 pm)
பார்வை : 226

மேலே