sernthu kolkiren

அப்பா ...
அம்மா இருந்தவரை
எங்களுக்குக் கவலையில்லை
அம்மா இறந்ததனால்
எங்களுக்கு தொல்லை

மூன்று மக்களும்
முறை வைத்து உங்களை
பராமரிக்க ஒப்பந்தம்

பேரக் குழந்தைகளோடு
கொஞ்சி விளையாடும்
ஆசை உங்களுக்கு

தாத்தா என்று விளையாடுகிறவர்கள்
சமயத்தில் எதையாவது வாங்கித்
தா .. தா என்று நச்சரிக்கிறார்கள்
எதையும் தராத தாத்தாவை
விரட்டியடிக்கிறார்கள்

இந்த வயதிலும்
இப்படிச் சாப்பிடுகிறாரே
அவளின் வெடிப்பேச்சில்
வெடிக்கிறது சண்டை தினம்தோறும்

என் இல்லாமை
அவளின் மனதில்லாமையால்
அவ்வப்போது
விசுவரூபம் எடுக்கிறது

பட்ஜெட்டில் பற்றாக்குறை
எப்படிச் சமாளிக்கலாம்
விவாதத்தில் எப்போதும்
உங்களையே
முன்னிலைப்படுத்துகிறாள்

எங்களை வளர்த்து ஆளாக்க
எவ்வளவோ செலவழித்தீர்கள்
உங்களுக்கென்று எதையும்
ஏன் சேர்த்து வைக்கவில்லை

அப்பா சொன்னார் அமைதியாக
சேர்த்து வைத்திருக்கிறேன்
அனாதை இல்லத்து முகவரி
நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன்
நீங்கள் சோர்ந்து போகாதிருக்க
விரைவில் சேர்ந்து கொள்கிறேன்

எழுதியவர் : (12-Jun-12, 7:51 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 174

மேலே