இதழ் தீண்டியக் காற்றிலும் இனிப்பு
புல் நுனியின் பனியெடுத்து அதன் மேல்
முள் நுனியால் னின் பெயர் எழுதினால்
மின்னும் வைரமாகிப் போகிறது,
அவள் இதழ் அசைவால் இயங்கிடும் இதயமே
அவள் இமைத் திறப்பதே எந்தன் காலை உதயமே,
கூந்தல் முடி உண்ட பூச்சிகள் பட்டுப் பூச்சியாகிடுமோ
பட்டுப் போகும் காற்று அவள் மீது பட்டுப் போகும் காற்று
வீற்றிடுமோ இனி குழலின் மீதிலும்,
முடிவிலியாய்த் தொடரும் உன் அழகின் வர்ணனைகள்
அடி நீ நீராடும் நீர் கோர்த்தே தேவ மங்கைகளின் ஆபரணங்கள்,
அகழ்ந்தெடுத்த அரியப் பொருளோ அகன்ற நெற்றி புகழ்ந்திட
போதுமில்லை வார்த்தைகள் தரணியாளும் தமிழுக்கும்.
குறிஞ்சி மலரின் மடலோ அவ் இமை மடல்
அது மூடிடும் விழி அழகில் ஆழியின் பெரிதோ,
அதனை விஞ்சிட தேடினில் எஞ்சிடுமோ எதுவும்,
முறையாக செய்த சிற்பத்தின் மூக்கினை மட்டும் முன்னூறு
ஆண்டுகள் முழுதும் விழித்து முறை செய்யினும் இவளின்
மூக்கில் முக்கோடியில் ஒரு பங்கேனும் தேறுமோ,
இவ்வுலகில் இதனை ஏதும் மீறுமோ,
தேனினை அலைவரும் அளவிற்கு ஆற்றினில் நிரப்பி
அதில் அலை இரண்டை பெயர்த்து அச்சினிலே வார்த்து
இவள் உடலில் இணைத்ததோ,
இதழ் தீண்டிய கற்றிலும் கலக்குதே இனிப்பு,
நிலவின் பிற்பாதியை பிடுங்கி எடுத்து உலவும் மங்கை
உந்தன் கன்னத்தில் பொருத்தினானோ
உன்னைப் படைத்த மீதி மண்ணில் நிலவுதனை படைத்தானோ,
விடையின்றி வெரிக்கிறேன்,
மழலையின் கரம் கொண்டு வழுக்கையை வழிக்கெடுத்து
வைர அச்சியில் வார்த்தெடுத்ததோ வாஞ்சை உள்ள வெண்
கழுத்து வழுக்கிட செய்கிறது அதனை பார்க்கும் மனம் அனைத்தையும்.