நட்சத்திர நாயகனை குளிர்விப்போம்...!
![](https://eluthu.com/images/loading.gif)
புல்கொண்ட பனிச்சுமை
நீக்கும் நட்சத்திரன்...!
தாமரைப் பெண்ணவளின்
தாவணி அவிழ்க்கும் காமுகன்...!
வட்ட வடிவில்
வானில் தொங்கும் அக்னிப் பழம்...!
எவ்வளவு நீர் குடித்தாலும்
அடங்காது இவன் கொண்ட தாகம்..!
அதிகாலையில்
அமைதியாய்ப் பிறப்பவன்
மதியத்தில் வெறிபிடித்தாடுவான்...!
இரவுக்கு நிலவனுப்பிவிட்டு
இவன் போய் தூங்கிக்கொள்வான்...!
என்ன வசியம் செய்தானோ
அன்றிலிருந்து இன்றுவரை
பூமிப் பெண் இவனை
இந்தச் சுற்று சுற்றுகிறாள் ...!
பாலிதீன்பைகளால் நீரை நாம் மூடியதால்
தாகம் அடங்காமல்
தவித்துக் கொண்டிருக்கிறான்
இந்த நட்சத்திர நாயகன்...!
தாகம் தீர்க்க
உறைந்திருக்கும் நீரையும்
உறிஞ்சத் தொடங்கிவிட்டான்...!
இவன் கோபத்தில்
தகிக்கும் போதெல்லாம்
மரங்கள் தான்
மழையென்னும் சாமரம் வீசும்...!
மரங்களையும் கொன்றுவிட்டோம் நாம்
உச்சகட்ட உஷ்ணத்திலிருக்கிறான் இவன்...!
கோபத்தில் ஒருநாள்
நம்மையவன் கொல்வது நிச்சயம்..!
அதற்கு முன்பேனும்
அந்தச் சுட்டெரிக்கும் சூரியனின்
தாகம் தணிக்க
பாலித்தீன் பை ஒழிப்போம்
சூடு தணிக்க
மழை தரும் மரம் வளர்ப்போம் ...!
சூரியன் தன் சுடுவாயால்
புவியை விழுங்காமல்
பார்த்துக் கொள்வோம்...!
சூரியனைக் குளிர்விப்போம்
சூரியனைச் சுற்றும்
பூமியை மகிழ்விப்போம்...!
அந்தோணி