தனிமையில் முதுமை

முகத்தில் முகம்
காண முடிகிறது ஸ்கைப்பால்
தொலை தூரத்தில்
இருக்கும் பேரனின்
மழலையை மட்டுமல்ல
அமெரிக்காவில் குழைக்கும்
நாயின் ஓசையையும் கூட
துல்லியமாய்க்
கேட்க முடிகிறது இணையத்தால்
அறிவியலின் அற்புதம்
அதிசயம்தான்

வந்து செல்லத்தான் ஆசை
ஆனாலும் ஒருமுறை
வந்தால் ஆகும் செலவு
ஒரு இலட்சம் அல்லவா
பாச மைய்யில்
தான் கற்றுக்கொடுத்த
சிக்கனத்தையும்
சேர்த்தெழுதும்
மகனின் கடிதத்தைப்
படிக்க முடிகிறது
மின் அஞ்சலில்


கொத்து கொத்தாய்
வரும் இருமலைத்
தடுக்க தண்ணீர்
எவரேனும் தருவார்களா
எனச் சுற்றி சுற்றிப்
பார்த்தபோது
வெறுமை மட்டுமே
மிஞ்சுகிறது வீட்டில்

சுடுகாட்டில்
எரியூட்டலையும்
அமெரிக்காவில்
இருந்தே செய்யும்வண்ணம்
கருவி ஏதும் வருமோ இனிமேல்

எழுதியவர் : வா. நேரு (13-Jul-12, 2:25 pm)
பார்வை : 272

மேலே