அக்னிசாட்சியாய் அநாதையானேன்

என்னைப்
பெத்தெடுத்தவளோ
செத்துவிட்டு
போறாளே!போறாளே!
அங்கே,
ஆத்தங்கரையிலே
என் அப்பனைத்தேடிப்
போறாளே! போறாளே!
என்னை அலறவிட்டு
ஆவியைத்தொலைத்து
போறாளே! போறாளே!
செம்மண் பூசிய
செவிட்டுபொம்மையாய் என்னைப்பாதியில் விட்டுப்
போறாளே!போறாளே!
கள்ளி முள்
குத்திக்கொண்டு என்
கால் கடுக்கவிட்டு
போறாளே!
கொல்லி முள்ளை
குத்திக்கொண்டு
என்னைத்தள்ளிவிட்டுப்
போறாளே!போறாளே!
வாய்க்கரிசிக்கேட்டு
வாயைகட்டிப்போறாளே வகையாய் வகையாய்
தின்ன ஏங்கிவிட்டு
வாய்க்கரிசியோடு
போறாளே!போறாளே!
சேற்றுக்கரையிலே
சோற்றுப்பானையைத்
தேடி,
போறாளே!போறாளே!
எனக்காய்,
வெறுங்கூடாய்
வெந்து நொந்து
வெறும்ஓடாய்ப்
போறாளே!போறாளே!
ஊரான் தூக்கிப்
போகும்
உப்புப்பானையாய்
போறாளே!போறாளே!
அவர்கள் சிந்தும்
மெப்புக்கண்ணீரைப்
பார்க்க,
போறாளே!போறாளே!
என்னை
அநாதையாய்விட்டு
அநாதையாய்ப்
போறாளே!
பள்ளிசென்று
கூட்டிவிட்டவள்
கொல்லிவைக்க
கூட்டிப்
போறாளே!போறாளே!
பத்துரூபாய்க் கொடுத்துவிட்டு,
ஒத்த ரூபாயும்
வாங்காமல் போறாளே!
அள்ளிஊட்டிவிட்டு
அர்த்தசாமம்
தூங்கவைத்தாளே!
முந்தானையில் போர்த்திவிட்டு
மூத்திரச்சேலையையும்
கட்டிக்கொண்டாளே!
காடும் கரடும்
நடந்தும்,
முல்லும் கல்லும்
மிதித்தும்,
முப்பாரியாய்
முல்லைக்
கொடியானாளே!
ஒப்பாரி
கேட்டுவிட்டு,
கரியாகப்போறாளே!
கஞ்சியோடு
காரமிளகாய்
கடித்துக்கொண்டு
படிக்க வைத்தாளே!
சாந்துசட்டியே
சுமந்து விட்டு
காலம் முடித்து
போறாளே!
வீதியும் முடிந்தது
விறகும்எரிந்தது
கருமம் முடிந்தது
கங்கையிலே கைகள்
நனைந்தது.
ஆத்தா,
உன்னை
சாம்பலாய்
கரைக்கவோ
என்னை கருவாய்
படைத்தாய்...
அம்மா!அம்மா!
வலிக்குதம்மா!
வலிக்குதம்மா!
பாவி
பகல்
கனவு கூட பழித்ததம்மா!....

எழுதியவர் : மணவாசல் நாகா (15-Jul-12, 5:08 pm)
சேர்த்தது : Nagaraj Ganesh
பார்வை : 192

மேலே