பைரவனே.....
என் காலத்தின் பைரவனே....
நினைவுகளை விட்டகலும்
நினைவுகள் எத்தனை எத்தனையோ
மறதியெனும் மரத்தில்
இளந்தளிர்களாய் உன் நினைவுகள்!
பழுத்த இலைகளாய் - அவை
உதிர ஆரம்பிக்கும்போது
உன் நினைவுகளே
பசுமையாய் மீண்டும் பூக்கின்றது!
இலையுதிர்வதிலும் தளிர்ப்பதிலும்
ஏகமாய் என்னை
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றாய்...!
கள்ளமிலா அன்பெனும்
ஆயுதம் தாங்கி வளைந்த
உந்தன் பார்வையில் நனைந்தது
எந்தன் நெஞ்சமானதால்
எனக்குள் சூழ்ந்து நின்ற காதலச்சமும்
உன்னால் களையப்பட்டது...!
கள்ளிப்பூக்கள் மட்டுமே
சூழ்ந்திருந்த எனது வனத்தில்
முல்லைப்பூக்களை பூக்கச்செய்தவன் நீ.....
தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சியின் தேடுதலுக்குக் கிடைத்த
சோலை வனமாய் எனக்கு நீ....
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு
மருந்தாய் எனைத் தாங்கிய மணம்....
இந்த உனது வாசனையை
என் இடமெங்கும் தெளித்து
படுத்துறங்க வேண்டும் பைரவனே......