தூக்கம்
இமை கதவுகள் அடைத்து
நித்திரை அழைப்போமா?
மனக் கதவுகள் திறந்து
கனவுகள் காண்போமா!
வராத தூக்கம் வர வேண்டி
கூரையினை பார்த்துக்கொண்டு
கண்கள் வெறிச்சோடி
காலை எழுந்தவுடன்
தூங்கிய நேரம்
ஞாபகப்படுத்த நினைக்கும்;
கையில் சிக்காத காற்றைப்போல்
நினைவில் சிக்காது அந்நேரம்;
படுத்தவுடன் தூக்கம் கொண்டு
கனவுகளை கட்டிகொண்டு
அச்சுகத்தில் நெளிந்துகொண்டு
நிஜம் என்று நம்பிக்கொள்ளும்;
சட்டென்று கண்விழித்து
கனவென்று நினைவறிந்து
தலையில் தான் தட்டிக்கொண்டு
திரும்பி போக துடிக்கும்-கனவிற்கே!
உனை அறியாமல்
அன்னையை கட்டிப்பிடித்து
பற்கள் கடித்துகொண்டு
புலம்பல் பிதற்றிக்கொண்டிருக்கும்;
பொழுது விடிந்தவுடன்
செய்த சேதிகள் சொல்லும்போது
செய்யாதது போல்
விசித்திரமாய் கதைகள் கேட்கும்;;
தூங்க கூடாது என நினைத்து
வரிசையாக பல அலாரம் வைத்து
அது அடிக்க அடிக்க
அணைத்து விட்டு
அரைநினைவில் அம்சமாய்
தூங்க தோன்றும்;
மார்கழி மாதம்
விடிகாலை நேரம்
கம்பளி போர்வையில்
மடிந்துக் கொண்டு
இதமாய் தூங்கும் சுகம்
வேறெதிலும் கிடைப்பதுண்டோ?
பல கோடியும் ஈடாகாது
நிம்மதியாய் நீ தூங்கும்
சில மணி நேர தூக்கத்திற்கு
-இதை விலை கொடுத்தேயேனும்
வாங்கிடவும் இயலாது!!!