மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில்!
மழை பெய்த
ஒரு மாலைப் பொழுதில் -
அப்பா
தொலைக் காட்சி சினிமாவில்
மூழ்கி இருந்தார் !
அம்மா
அடுக்களையில்
காபி போட்டுக் கொண்டிருந்தார் !
தங்கை
ஏதோ ஒரு படத்தை
காகிதத்தில் வரைந்து கொண்டு இருந்தாள்!
தம்பி
வாசலில் நின்றபடி
கப்பல் செய்து
தண்ணீரில் விட்டுக் கொண்டிருந்தான் !
அக்கா மட்டும்
ஜன்னல் கம்பிகளைப்
பிடித்துக் கொண்டு
ஒரு குடையின் கீழ்
கொஞ்சிப் போகிற
தம்பதிகளை ஏக்கமுடன்
பார்த்தபடி வீதியின்
மழை நீரோடு
விழிநீரைச் சேர்த்து நின்றாள்!