சிகப்பு காரும் சிகப்புத்தொப்பியும்

அப்பா வராண்டாவில் உட்கார்ந்து ஷேவிங் பண்ணிக்கொண்டிருந்தார்.அருகே விளையாடிக்கொண்டிருந்த என்னை "ராஜா! இங்கே வா!அப்பா கரெக்டா ஷேவிங் செஞ்சுருக்கனா பாரு",என்றார். அவர் முன்பு அய்யப்ப சாமீ போல் குத்த வைத்து அமர்ந்து அவர் கழுத்தைப் அண்ணார்ந்து பார்த்து சரியா இருக்குப்பா!என்கிறேன்.

"கண்ணா! பெருசானதும் அப்பாக்கு என்ன வாங்கித்தருவே" என்கிறார். "நான் பெரியவன் ஆனதும் ஒரு சிவப்புக்கார் வாங்கி,சிவப்புத்தொப்பி போட்டுக்கிட்டு அப்பாவ கூட்டிக்கிட்டுப்போவேன்" என்கிறேன். கண்கள் கலங்கக்கலங்க சிரித்த அப்பா,"அது என்ன சிவப்பு தொப்பி?" என்று கேட்க ,என்ன சொல்வது எனத்தெரியாமல் விழித்தேன்.(அப்போது வந்த பல்லாண்டு வாழ்க ! படத்தில் எம்.ஜி..ஆர் .சிவப்புத் தொப்பி அணிந்திருப்பார்)

அது நடந்து ஒரு முப்பது வருஷங்கள் இருக்கும்.
இந்த முப்பது வருஷங்களாக,ஒரு நண்பனாக,
அறிவுரை சொல்லும் ஆசிரியனாய் எனக்கும் அவருக்குமான பந்தம் தொடர்ந்திருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் வயதின் முதிர்ச்சியால் மயங்கி விழுந்த போது,பிள்ளைகள் தண்ணீர் கொடுத்து காப்பாற்றி விட்டனர். பதறிப்போன நான் டாக்டரிடம் போகலாம் என்று கூறியபோது வேண்டாம் ராஜா! நாந்தான் இப்போ நல்லா இருக்கேனே!"என்று மறுத்துவிட்டார்.

அடுத்த மூன்று நாட்களுக்குப்பின் பழையபடி கிண்டலும் கேலியுமாக என் பிள்ளைகளுடன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

"ஏம்ப்பா! படிக்கிற பசங்கள இப்படி கெடுக்கிறீங்க?" என்றதற்கு ,சிறு குழந்தையாய்,"அவர்கள்தான் என்னைக் கூப்பிட்டார்கள் ராஜா!'என்று தப்பித்தார்.

ஒரு ஜாலி மூடில் "ஏம்ப்பா! உங்களுக்குத்தான் என்பது வயசாயிருச்சு இல்ல! எப்பதான் போவீங்க?
என்கிறேன். அதற்கும் சிரித்து மழுப்பியபடி ,"எல்லாம் காலம் வந்தால் போய் விடுவேன் ராஜா!"
என்கிறார்.

அடுத்த இரண்டு வாரங்கள் நன்றாகவே போயிற்று. திடீரென ஒருநாள் சாப்பாடு செல்லாமல்
போய் மிகவும் துவண்டு விட்டார்.

அவராகவே ஆஸ்பத்ரிக்குப் போகலாம் என்றார்.பின் என் பெண்ணை அழைத்து அவர் பையை எடுத்து வர சொன்னார். அதிலிருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து என்னிடமும் ஆயிரம் ரூபாயை எடுத்து என் தமையனிடமும் கொடுத்து,"இதுதான் என்னிடம் இருக்கிறது! வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.

அப்போது கூட அவரை நான் கிண்டலாக ,ஆஸ்பத்ரிக்குப் போய் வந்து டபுள் ஆகக் கேட்கப்போகிறீர்கள் ! என்று கூற, "அப்படீங்கரியா!"
என்று சிரித்துவிட்டுத்தான் கிளம்பினார்.

அங்கு சென்றதும்தான் அவர் மிகவும் சீரியசாக இருப்பதாகவும் ஐ.சி.யு வில் வைக்கவேண்டும் என்றும தெரிந்தது.

ஒரு இரவு முழுவதும் இருந்தவர் மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கண்ணை மூடிவிட்டார்.

என்னை அழைத்து டாக்டர் அவருடைய மரணத்தை உறுதிப்படுத்தி அவரைக்கட்டியபோது
"என்ன ராஜா!எனக்குக் காலம் வந்து விட்டது பார்த்தாயா! " என்று கேட்பது போல் இருந்தது.

இப்போது சிகப்பு நிறத்தில் கார் வாங்கிவிட்டேன்.
ஒரு சிகப்புத்தொப்பியும் கூட வாங்கியிருக்கிறேன்.ஆனால் அப்பா?

என் காரையும் தொப்பியையும் பார்த்து
"உங்கள் காரைகூடபொறுத்துக்கலாம்.சிகப்புத் தொப்பிதான் சகிக்கலை!" என்கிறான் என் மகன்.

எழுதியவர் : கோவை ஆனந்த் (20-Jul-12, 11:52 pm)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 209

மேலே