கையில் ஒரு கோடி

கனவு தேவதை கனவில் வந்தாள்
மெல்ல என்னை தட்டி எழுப்பினாள்
கையில் ஒரு கோடி
கிடைத்தால் என்ன செய்வாய்
எனக் கேட்டாள் ...

படபடக்கும் மனதை பக்குவப் படுத்தி
நான் சொன்னேன்
சின்னதாய் ஒரு வீடு கட்ட
எனக்குள்ளே ஆசை இருந்தாலும்
அநாதை இல்லங்களுக்கும்
தொண்டு நிறுவனங்களுக்கும்
சமமாய் பிரித்தளிக்க
சம்மதம் தருவேன் ..

உற்சாகம் அடைவேன்
உறவினருக்கு தெரிவிப்பேன்
மறந்து போன நினைவுகளை
மனதில் பதிப்பேன்
பொது அறிவை வளர்ப்பேன்
பலரை உடன் அழைப்பேன்

அரங்கில் நுழைந்ததும்
பெருமிதம் அடைவேன்
சிரிக்கத் தெரியா விட்டாலும்
விழுந்து விழுந்து சிரிப்பேன்
சொல்வதைக் கேட்டு ரசிப்பேன்

விடை தெரியா விட்டாலும்
விடைகள் அனைத்திலும்
பணத்தைக் கட்டுவேன்
ஆர்வமாய் எதிர்பார்ப்பேன்
ஆனந்தமாய் கை தட்டுவேன்

கையில் ஒரு கோடி
என் நிகழ்ச்சி
சன் டி வி யில்
எப்போது வருமென்று
எதிர் பார்த்து காத்திருப்பேன்

மெல்ல முகம் சுளித்தாள்
கனவு தேவதை
நிகழ்ச்சியை கேட்க வில்லை
நிஜத்தை கேட்டேன் என்றாள் ..

நிஜத்தை சொல்ல ஆரம்பித்தேன்
அநாதை இல்லங்களுக்கும்
தொண்டு நிறுவனங்களுக்கும்
அல்வா கொடுப்பேன் ...
போதும் நிறுத்து என்று
போய் விட்டது கனவு தேவதை ...


( இல்லாததைக் கொடுக்க துடிக்கிறது மனம்
இருப்பதைக் கொடுக்க யோசிக்கிறது தினம்
இதுவே இந்தக் கவிதையின் மணம் )

எழுதியவர் : அலாவுதீன் (21-Jul-12, 12:21 pm)
Tanglish : kaiyil oru kodi
பார்வை : 230

மேலே