மௌனமாக…..

மௌனமாக…..


ஆத்திரத்தால் உடலில் நிகழும்
காத்திரமான பௌதிக மாற்றம்
காத்திடும் கௌரவ மந்திரம்,
சூத்திரமாய்த் தோன்றிடும் மௌனம்.

அரிய மொழி மௌனம்
பெரிய சாதனைகளும் சாதிக்கும்.
உரிய நேரத்து மௌனம்
எரிய வைக்கும் உண்மையை.

பண்பற்ற சொல்லருவியில் நீந்தி
புண்படுதல் தவிர்க்கும் துணை.
கண்ணியமான கைப்பிடி மௌனம்.
கண்ணிற்குப் புலப்படாப் பௌர்ணமி.

ஒருமித்த கூட்டுறவின் பலத்தில்
இரு கரங்கள் எழுப்பும் ஒலி.
ஒரு கரத்தின் இழப்பு நிலையைப்
பெருமௌனம் தரவும் கூடும்.

காயாகக் கசக்கும் மௌனம்
வாயாடிக்கு வலி தரும் தேள்.
நோயாடா தியான நிதானம்
சாயாத மனதின் மௌனம்.


பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-5-2007.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (28-Jul-12, 2:19 pm)
பார்வை : 316

மேலே