சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.

இலைகள் உதிர தனித்த மரங்களின்
பூங்கனவுகள் சிதைகிற கோலம்
இரவுக்கரும் பலகையில்
மயான நிசப்தத்தால்
காலம் எழுதிச்செல்லும்.

பயம் துளிர்த்த அச்சத்தோடு
பூமியின் மார்பு வெடிக்க
சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்கள்
ஒளிப்பாசணங்களை அருந்தி
மரணத்தை கூவியழைக்கிற இசை கவிந்து
மண்ணின் முகத்தில்
படியும் பிண கோலங்களாய்

ஈசல்கள்,ஈசல்களின் வாழ்வை
அறிந்து கொள்ளும் முனைப்புடன்
சந்தேகம் வினவி தோற்றுப்போகும்
நிமிஷங்களில் விடிந்து கிடக்கும் காலை
கூட்டிப் பெருக்குகிற ஈர்க்குகளுக்கும்,
கொத்தி தின்னுகிற அலகுகளுக்கும்
ஒரு பொழுதுக்குள் நிகழ்ந்த
பெரும் துயர அவலம்
அலட்சியமாகவே இருக்கும்.
எப்போதையும் போல்.

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (29-Jul-12, 1:50 am)
பார்வை : 215

மேலே