பனைமரம் பற்றி ஒரு கவிதை

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

*பனைமரம்*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

*பனைமரம்*
பூமியின் மீது
எழுதப்பட்ட
தன்னம்பிக்கை கவிதை.....

சூரைக்காற்றென்ன ?
புயலே ! வந்த மோதினாலும்
வீழ்த்த முடியாத
மல்யுத்த வீரன்
தமிழ்நாட்டின் மறவன்.....

யானையும்
பனையும் ஒன்றே !
இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்

அடிமரம்
வீட்டின் விட்டம்....
சிறிய பனங்கை
வீட்டின் சட்டம்.....

இதன் ஓலை
கையில் விசிறி ஆகும்
கலைகளில்
கைவினைப் பொருள்கள் ஆகும்

வீடுகளில் கூரையாகும்
ஓலைச்சுவடி ஆகும்

சரக்குக்கே !
போதையை கொடுப்பது
பனைச்சரக்குதான்....

இதற்கு முன்னால்
ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம்
தலைத்தெறிக்க ஓட்டம் எடுக்கும்..

கல்லைச் சட்டியில் ஊற்றி
மண்ணினுள் புதைத்தாலோ
ஒரு மாதத்தில்
தெளுவாக உயிர்த்தெழும்....

இதற்கு பிஞ்சு பிறந்தவுடன்
நுங்கு என்று
பெயர் சூட்டப்படும்.....

கோடை காலத்தை
சமாளிக்க
இது ஒரு குடை ..

பனம்பழம்
பெரிய பழம் மட்டுமல்ல
பெரிய பயனுள்ள பழமும் கூட.....

ஔவைக்குக் கிடைத்த
சுட்ட பழம் போல்
இதையும் சுட்டு தான்
சாப்பிட வேண்டும்......

பனம்பழத்தை
சாப்பிட்ட பின்
பனங்கொட்டையை
மண்ணினுள் போட்டு மூடினால்
மண்ணாகாமல்
பனங்கிழங்காக
அவதாரம் எடுக்கும்......

அந்த விதையை வெட்டினால்
கன்று ஈன்ற
பசுவின் முதல் பாலில் உருவாக்கப்படும்
சீம்பு போல்
இதனுள் பனம்சிம்பு இருக்கும்...

வெட்டிய விதையை
காய வைத்தால்
அடுப்புக்கு
விறகாக உருவெடுக்கும்....

தாய்ப்பாலை விட
உயர்வான ஒன்று
இந்த பூமியில்
இருக்கிறது என்றால்
அது 'பனைப்பால்' தான்
அதன் செல்லப்பெயர் 'பதநீர்'....

இந்தப் பாலை காய்ச்சினால்
கிடைக்கும் கருப்பட்டி
இது பட்டி தொட்டி எல்லாம்
புகழ் பெற்றது....

பனங்கற்கண்டு
மனம் கவர்ந்து
உண்பவர்களும் உண்டு...

இந்த மரம்
பெயர் பலகை வைக்காத
ஒரு மருந்துக்கடை.....

பனையில்
108 பயன்பாடு
இருப்பதாக கூறுகிறது
'தால விலாசம்' நூல்
இதற்கு 'தலவிலாசம்'
கொடுக்கிறது......

தேவலோகத்தில் இருக்கும்
" கற்பகத்தரு மரம் கூட
கேட்டால் " தான் கொடுக்கும்......
பூலோகத்தில் இருக்கும்
இந்தக் " கற்பகத்தருவோ!
கேட்காமலேயே"
வேண்டியது எல்லாம்
கொடுக்கும்........!!!!

*கவிதை ரசிகன்*

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Nov-24, 9:51 pm)
பார்வை : 36

மேலே