வீணையடி நீ எனக்கு
வீணையடி நீயெனக்கு !
—-
வீணையடி நீயெனக்கு
விழிகளடி நானுனக்கு /
ஏணியடி பாவைமொழி
ஏற்றமொன்றே போகும்வழி /
காலமெனும் வெள்ளத்திலே
கதறியேநான் தத்தளிக்க /
கோலமயில் கரம்பற்றி
கொலுவினிலே வைத்தாயே் /
வங்கக்கடல் மத்தியிலே
வட்டமிட்டப் புயலாக /
கங்குகரை மீறிவந்து
காளையெனைக் கொண்டாயே /
தென்பொதிகைத் தென்றலென
தமிழ்க்கவியைத் தழுவியவள் /
மன்றத்திலே எனைமணந்து
மகிழ்ச்சியிலே திளைத்தாயே /
இனிதான இசையாக
இன்பத்தின் ஊற்றாக /
பனிபோன்ற மலராகப்
பாவியென்னை நிறைத்தாயே !
-யாதுமறியான்.