உயர்ந்திடு உயர்த்திடு
உயர்ந்திடு உயர்த்திடு !
—-
ஒவ்வொரு நாளும்
உயர்தலே வாழ்க்கை /
எவ்விடம் ஆயினும்
ஏற்றமே கொள்கை /
சீரிய நோக்கமும்
சிறந்தநல் திட்டமும் /
நேரிய உழைப்பும்
நீங்கிடா ஓட்டமும் /
விரைவினில் முழுதுமாய்
வெற்றியை நல்கிடும் /
கரையிலாக் களிப்பினில்
காலமும் தள்ளிடும் /
ஏணியாய் நிற்போரை
ஏற்றியே வைத்திடு /
வீணிலே சிந்தாத
வியர்வையை மதித்திடு /
உனதான உடனாளர்
ஓம்புதல் பொறுப்பே /
தன்னலம் போற்றாத
தகைமயும் சிறப்பே /
திறமைக்கு பணியையும்
தேவைக்கு ஊதியமும் /
வறுமையைப் போக்கிட
வழங்கிட வேண்டுமே /
முயற்சியும் பயிற்சியும்
முனைவோர்க்கு வழங்கிட /
வியத்தகு முடிவுகள்
வெளிப்படத் தொடங்குமே /
அனைவரையும் அரவணைத்தல்
தலைவனின் இயல்பே /
அனைத்தையும் பகிர்ந்தாலே
ஆகிடுமே செழிப்பே !
-யாதுமறியான்.