வாஷிங் மெஷின்
"அபர்ணா அந்த துணியை எடுத்திட்டு வா" என்று தன் குட்டிபிள்ளையை அழைத்தார் முருகன்.
அபர்ணாவும் அவளுடைய துணியை எடுத்து வந்து பக்கெட்டில் ஊற போட்டாள். அதே சமயம் மொபைலில் பாட்டு ஒலித்தது.
"என்ன தோழரே என்ன விஷயம்?" என்றார் முருகன்.
"உங்கள பார்க்க வரலாம்தான் கூப்பிட்டேன்" என்றது மருமுனையிலிருந்து பதில்.
"அரை மணி நேரம் கழிச்சு வாங்க. அப்படியே ப்ரியாவையும் கூட்டிட்டு வந்திருங்க. சாப்பிட்டிட்டு சாமன் வாங்கிட்டு வந்தரலாம்" என்றார் முருகன்.
"திருப்பதி வரேன்னான், வா சீக்கரம் போய் துவைத்துவிட்டு வந்தரலாம்" என்று தன் மனைவியை அழைத்தார் முருகன்.
இருவரும் மேலே போக நானும் வரேன் என்று அபர்ணாவும் தொத்தி கொண்டாள். இருவரும் துவைத்து கொண்டிருக்கையில் திருப்பதியும் அவருடைய மனைவியும் வந்தார்கள். அபர்ணா தனியே அவளுடைய துணியை தண்ணீரில் நனைத்து விளையாடி கொண்டிருந்தாள். முன்று மாடி ஏறி வந்த களைப்பில் இருவரும் அமர்ந்து விட்டனர்.
"என்ன தோழரே, இன்னிக்கு என்ன பிளான்? எங்க போறது?" என்றார் முருகன்.
"சாப்பிட்டிட்டு கடைக்கு போயிட்டு வரலாம்" என்றார் திருப்பதி.
"ஏன் பாஸ் ரெண்டு பேரும் ஆளுக்கு நாப்பதாயிரம் வாங்கறீங்க ஏன் ஒரு வாஷிங் மெஷின் வாங்க மாட்டிங்கறீங்க? ரொம்ப மிச்சம் பண்ணாதிங்க" என்றார் திருப்பதி.
"காசு மிச்சம் பண்ணறதுக்காக வாஷிங் மெஷின் வாங்காம இல்ல. வாரத்துல ரெண்டு மணி நேரம் வேலை, அவ்வளவுதான். ரெண்டு மணி நேரமும் நாங்க மூணுபேரும் ஒண்ணா சந்தோசமா இருக்கற நேரம். ஆர அமர உக்காந்து பேசமுடியாத விசயமெல்லாம் இப்போ பேசுவோம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மனம்விட்டு பேசுவோம். பாப்பாவுக்கு சுதந்திரமா விளையாடின மாதிரியும் இருக்கும். இது சந்தோசம் தான்" என்றார் முருகன்.
"எனக்கு ஆபரேஷன் ஆனதிலிருந்து இவர் என்னை அலச விடறதில்லை. நான் துவைக்க எவர் அலச என்று எப்போதும் துணையிருக்கிறார். அதுவும்மில்லாம பொண்ணுக்கு என்னென்ன வேலை எப்படி செய்யணும்னு இப்பயிருந்தே சொல்லி தந்தா பெரிசான சுலபமாயிருக்குமில்லையா? அதனால்தான் இவர் வாஷின் மெஷின் வாங்கலாம்னு சொன்னாலும் நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றார் முருகனின் மனைவி.
வாஷின் மெஷின் இல்லாததில் இப்படி ஒரு சந்தோசம் இருக்கிறதா என்று வியந்து போய் ப்ரியாவிடம் "இனிமேல் நாமும் வாஷின் மெஷினை விட்டிட்டு நாமே துணி துவைப்போம்" என்றார் திருப்பதி.