இறந்த காதலி ..... இறவாத காதல்....
ஒத்தையா கிடக்கையிலே
கண்ணு ரெப்பை அசரையிலே
என் நெஞ்சு கூடு வேகுதடி
உன்னோட நெனப்பால...
பூப்போட்ட லவிக்கையும்
அரக்கு நிற தாவணியும்
கண்ணாடி வளைவியும்
செஞ்சாந்து பொட்டழகும்
கண்முன்ன நிக்குதடி
என் இதயத்த கசக்குதடி
வருசங்க தேஞ்சாலும்
உன் ஞாபகங்க தேயலடி
சவுக்கு தோப்புக்குள்ள
நீ தந்த முத்தக்கறை காயலடி
பருத்தி சோல போல
பாவி மவ நீ சிரிச்ச
சிரிப்பு இன்னும் மறையலையே...
உன் கால் கொலுசு சிணுங்கல்
இன்னும் என் காத விட்டு ஓயலையே...
ஒத்தை மர பாலத்துல
வழி மறிச்சி நின்னதும்
அத்தை மவ நீ
என்ன வம்புக்கு இழுத்ததும்
முந்திரி மரத்தடியில்
உன் மடியில் தூங்கியதும்
புளிய மரத்தடியில்
பல்லாங்குழி ஆடியதும்
குயிலோட பாட்டுக்கு
எதிர் பாட்டு பாடியதும்
சந்தையில உனை கண்டு
சாடையில பேசியதும்
ஓடை நீருக்குள்ள
உனை துரத்தி நீந்தியதும்
வரப்பு சேத்துக்குள்ள
எனை தள்ளிவிட்டு ஓடியதும்
முதல் முத்தம் தந்தப்ப
பயந்துபோய் ஓடியதும்
சங்கரா குழம்பு வச்சு
நீ எனக்கு ஊட்டியதும்
நெஞ்சு நெனக்கையில
கண்ணு ரெண்டும் கலங்குதடி
என்னோட மனசுக்கு
கிறுக்குதான் புடிக்குதடி
காத்திருந்து வாங்கி வந்த
முத்துச்சரம் உன்னை நான்
தாரமாக்கி கொள்ளத்தானே
தாலியோட ஓடி வந்தேன்
ஆனா....
புடம் போட்ட தங்கமே!
நீ பாடையிலே போனதேண்டி ?
மாமா!
உன் நெஞ்சுதான்
எனக்கு மஞ்சுன்னு சொன்னவளே!
சுடலை காட்டை நீயும்
மஞ்சமாக்கி புதைஞ்சதேன்டி?
பச்சரிசி பல்லழகி
உனக்கு வாய்க்கரிசி விழுந்ததேன்டி?
எனக்கு வாக்கப்பட நெனச்சவளே !
நீ வானத்துக்கு போனதேன்டி?
கம்மா கரையில நீ
சொடுக்கெடுத்து விட்டதெல்லாம்
சும்மா கண்முன்ன படமாக ஓடுதடி ...
கம்பங்காட்டு காத்தெல்லாம்
உன் வாசம் வீசுதடி
மாமரத்து கிளியெல்லாம்
உன் பேரை படிக்குதடி
கரிச்சாங்குருவி கூட
உன்னை பத்தி பாடுதடி
என் கை பிடிச்சி நீ நடந்த
ஒத்தையடி வரப்பு மேல
ஒத்தையா நான் நடந்தா
என் நெஞ்சு கூட்டுக்குள்ள
கத்தி வந்து எறங்குதடி
ரோசா பூவத்தான்
நான் உன்னை பார்த்திருந்தேன்
ரோசா வாடுமுன்னா
நான் அப்ப நெனச்சிருந்தேன்?
ரோசா உதிர்ந்தாலும்
காம்பாச்சும் நிக்குமடி ...
என் ராசாத்தி எனை நீயும்
தவிக்க விட்டு போனதேண்டி..?
உன்னை நெனச்சி உன்னை நெனச்சி
இன்னைக்கி எல்லாம் நேத்தாபோச்சி
என்னோட கனவெல்லாம்
மண்ணோட மண்ணாபோச்சி
விதியோட சண்டை போட்டு
என் ஆயுசும் தான் தொத்துபோச்சி
என் தங்க புதையல் தான்
புதைக்குழிக்கு போயேபோச்சி
உன்னோட நெனப்பு எல்லாம்
தீயாக எரியுதடி
பட்ட தீக்காயத்துக்கு களிம்பாக
அதுவேதான் இருக்குதடி...
உன்னை தொலைச்சாலும்
உன் மனசை நான் தொலைக்கலைடி..
என் உசிரை தொலைச்சிபுட்டு
வாழும் வெறுங்கட்டை நான்தான்டி...