அத்தியாயம் ஒன்று- அடிமையின் கனவுகள்

காலைல எழும்பும் போதே எட்டு மணியாயிருச்சு. பயங்கரமான வேர்வை, தலைவலி. எப்படியாவது அதக் கண்டுபிடிச்சுரணும். எங்க வைச்சேன்னு தெரியல. என்ன பண்றதுன்னு தெரியல. அதக் கண்டுபிடிக்கலனா செத்துப் போயிருவேன். அவ நேத்தைக்கு சீக்கிரம் வந்துட்டா. எதுவுமே பண்ண முடியல. கண்டுபிடிச்சா திட்ட மாட்டா. அழுதுருவா. ரொம்ப அழுதுட்டா. இனிமேல அவ அழுறத என்னால பாக்க முடியாது.

அவ இப்போ காலேஜுக்குப் போயிருப்பா. அவள நீங்க பாத்திருப்பீங்க. ஒரு பெந்தெகோஸ்தே பொண்ணு காலேஜ் புக்சோட நாகர்கோவில் பஸ்சுல ஏறுறத நீங்க பாத்தா அது அவளாக் கூட இருக்கலாம். அவ இப்போ circuit design பாடம் எடுத்துட்டு இருப்பான்னு நெனக்கறேன். அந்தப் புக்கையெல்லாம் பாத்தாலே எனக்குத் தலைசுத்தும். அதைப்படிச்சுட்டு எப்படி பாடமா வேற எடுக்குறாளோ? எனக்கு பயமா இருக்கு. சீக்கிரம், சீக்கிரம்...

பையனோட டேபிளுக்குக் கிட்ட வச்சிருப்பேனோ? அவன் பாத்துருக்கக் கூடாதே... அவன் புக்சையெல்லாம் புரட்டிப் போடுறேன். அவன் அவனோட அம்மாவ மாதிரி. எல்லாத்தயும் ஒழுங்கா அடுக்கி வெச்சிட்டுப் போயிருந்தான். அவனையும் நீங்க பாத்திருப்பீங்க. கண்ணாடியோட, கொஞ்சம் குண்டா ஒரு பத்து வயசுப் பையன் மார்த்தாண்டம் பஸ்ல ஏறினா, அது அவனாக் கூட இருக்கலாம். அவன் பெரியவனான அப்புறம் என்ன ஆவணும்னு ஆசப்படுறான்னு தெரியல. ஒருவேள என்ன மாதிரி ஏதாவது பைத்தியக்காரத்தனமான ஆச வச்சிருக்கானோ? இருக்காது. ஒருநாள் அவங்கிட்ட அப்பன் மாதிரி பேசணும். ஆனா பேசற நெலமயிலயா நான் இருக்கேன்? நல்லவேள அது இங்க இல்ல. ஒருவேள இருந்து அவன் எடுத்துப் பார்த்திருந்தான்னா? இல்ல, எடுத்திருந்தா அவன் அம்மாட்ட குடுத்துருப்பான். எப்பிடியாவது கண்டுபிடிக்கணும்...

வேண்டாம், அதத் தேட வேணாம், எழவ இத்தோட விட்டுரலாம்னு தோணுச்சு. ஆனா மனசு சொன்னத ஒடம்பு கேக்கல. தல வலிக்குது. பத்து வருஷப் பழக்கம். எப்பிடி ரெண்டு நாள்ல போயிரும்? எப்பிடித்தான் அவளுக்குத் தெரியாம சமாளிச்சேன்னு தெரியல. ஒருவேள அவளுக்குத் தெரிஞ்சிருக்குமோ? தெரிஞ்சும் எதுவும் பண்ணாம இருக்காளோ? ஒருவேள தெரிஞ்சிருந்தா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா? தெரியல.

தேட வேண்டாம்னு முடிவு பண்ணினாலும், நானேயறியாம அதத் தேடிகிட்டிருக்கேன். அவ என்னோட துணிய எல்லாம் அயர்ன் பண்ணி ஒழுங்கா வச்சிருந்தா அதையும் கலச்சுப் போட்டுட்டேன். மனசுக்குள்ள ஒரு குற்றவுணர்வு. அவளுக்குன்னு நான் என்ன பண்ணிருக்கேன்? ஆனா அவ எல்லாமே பண்ணிருக்கா. நான் அதுக்கெல்லாம் தகுதியில்லாதவனாயிருக்கேன். இந்தப் பழக்கத்தை எப்படியாச்சும் விட்டுரணும்.

தேடிகிட்டிருக்கேன். ஒருகொத்தா பேப்பர் கீழ இருக்குது. நான் எழுதணும்னு தொடங்கின நாவல் அது. என்னோட மாஸ்டர்பீஸ் அது. ஆனா தொடங்கி பத்து வருஷத்துக்கு மேல ஆகியும் பத்து பக்கத்துக்கு மேல போகல. எப்படியாவது அத எழுதி முடிக்கணும். அந்த பேப்பருக்கு இடையில இருந்து நான் தேடினது கீழ விழுந்துது. வெள்ளைப்படிகங்களா அந்தச் சின்ன பிளாஸ்டிக் பைக்குள்ள மார்ஃபைன் பதுங்கிக் கெடந்துது.

இனி அத ஊசி போடுறதுக்கு தயார் பண்ணனும். நெறய பேரு மூக்குவழியா உறிஞ்சுவாங்க. இருந்தாலும் ஊசி போடுற சொகமே தனிதான். ஊசி அத உறிஞ்சிகிட்டுது. இனி போட வேண்டியது தான் பாக்கி.

ஏன் இவ இப்பிடியிருக்கா? என் அம்மா மட்டும் கண்டுபிடிச்சிருந்தான்னா இந்நேரம் கையில கிள்ளியாவது இந்தப் பழக்கத்த விட வச்சிருப்பா. இவ மட்டும் ஏன் இப்படியிருக்கா? அம்மா, நீ எங்க இருக்க? எதுவுமே சொல்லாம, வேலவெட்டிக்குப் போன்னு சத்தம் போடாம இவ மட்டும் ஏன் இப்பிடிருக்கா?

அந்த மருந்து நரம்பு வழியா எறங்கிச்சு. கண்ணெல்லாம் சொக்கிச்சு. கனவுகள்... என்னோட மாஸ்டர்பீஸ், அப்புறம் சாகித்ய அக்காதமி, அப்புறம் ஞானபீடம். மொதல்ல அவளுக்குப் புடிச்ச கலர்ல ஒரு பட்டுப்பொடவ வாங்கணும். அவ மொகத்துல சிரிப்ப பாக்கணும். நிஜமான சிரிப்பு. எனக்குன்னு சிரிக்குற சிரிப்பில்ல அது. ரொம்ப சந்தோஷமான சிரிப்பு. அப்புறம்....

எழுதியவர் : (2-Aug-12, 7:40 pm)
சேர்த்தது : பைத்தியக்காரன்
பார்வை : 353

மேலே