என் அப்பா....!!!!
தினமும் ஏதாவது ஒரு விஷயதுக்கு சண்டை பல வருடம் நானும் அவரும் முகம் பார்த்து பேசியதில்லை, அம்மா மட்டுமே இடையில் தகவல் பரிமாற்றம். பாசம் இல்லைடா உனக்கு அப்பாமேலே, வாரம் ஒருமுறையாவது கூறிவிடுவார் அம்மா. நானும் அப்படியே பழகிவிட்டேன். என்ன தவறு செய்தார் யோசித்தேன். ஈ, எறும்புக்கு கூட தீங்கு செய்ததில்லை. மது, புகையிலை, எந்த பழக்கமும் இல்லை. பிறகு ஏன் பிடிப்பில்லை? யோசித்தேன். பெரிதாக சம்பாதிக்கவில்லை, வெகுளியாக இருக்கிறார், இவையெல்லாம் ஒரு காரணமா? இல்லை, பிறகு ஏன் பிடிப்பில்லாமல் போனது?
அன்பு!
ஆம் எல்லா அப்பாக்கள் போல அன்பாக இல்லை...,
இல்லை, இல்லவே இல்லை, அன்பை வெளிபடுத்த தெரியவில்லை அவருக்கு அதுவே உண்மை. ஆம் சிறுவயதில் ஒரு நாள்,
இரவு 10௦ மணிக்கு வந்தார்அப்பா, வழக்கமாக கொண்டுசெல்லும் டிபன் பாக்சில் கோழி குழம்பும் அதில் சில கோழி கால்களும், தலைகளும்.
இரவு தூங்கிகொண்டிருந்த என்னையும் என் அண்ணனையும் எழுப்பினார். இந்தா பசங்கள சாப்பிட சொல்லு என்று அம்மாவிடம் கொடுத்தார். இறைச்சி உணவு என்றால் தீபாவளி, கரிநாள் மட்டுமே பார்ப்போம். தூக்கம் பறந்தது, அந்த கோழி தலைகளும் கால்களும் ஏதோ மிகப்பெரிய விருந்தாக தெரிந்தது அன்று. காரத்தால் கண்களில் கண்ணீர் வர துடைக்க தோன்றாமல் சாபிட்டோம்.நாங்கள் சாப்பிடுவதை அம்மா ரசித்துக்கொண்டிருந்தார் அவர் முகத்தில் ஏதோ ஒரு குழப்பம். அந்த வயதில் என்ன தெரியும் எனக்கு? நாங்கள் வயிறு நிரம்ப சாப்பிட்டு படுத்தோம்.நாங்கள் தூங்கியதாக நினைத்து அம்மா மெதுவாக ஆரம்பித்தார்.
ஏது பணம்?
அப்பா சமாளித்தார் நண்பனிடம் வாங்கியதாக கூறினார். அம்மா நம்பவில்லை, குடைய ஆரம்பித்தார்கள். பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு முதலாளி வீட்டு கழிவறையை சுத்தம் செய்ததற்கு கொடுத்த 20 ரூபாயில் தான் இது என தெரிந்ததும் அழ ஆரம்பித்தார் அம்மா. அப்பவோ அம்மா அழுவதை புரியாமல் குழம்பு 3 ரூ கோழிக்கறி 7 ரூ காபித்தூள் 8 ரூ நாளைக்கு டீ குடிக்க 2 ருபாய் வச்சிருக்கேன் என்று 20 ரூபாய்க்கு கணக்கு சொல்லிகொண்டிருந்தார்.அம்மாவோ அழுகையை நிறுத்தவில்லை. இனி பசங்களுக்கு ஏதும் வாங்கிட்டு வரலேன்னா கூட பரவாயில்லை இனி இது மாதிரி செய்யாதிங்க, அம்மா சொன்னதும் அப்பா வேகமாக தலையை அட்டிவிட்டு, சாப்பாடு போடு டி ரொம்ப பசிக்குது என்றதும் அம்மா அழுகையோடு அப்பாவை பார்த்தது இன்றும் கண் முன் நிற்கிறது. ஏதும் புரியாத அன்று தூங்கிவிட்டேன் இன்று தூங்க முடியவில்லை அந்த நான் நினைவு வந்தால்.இப்போது புரிகிறது அப்பாவிற்கு அன்பில்லாமல் இல்லை என்று. அவருக்கு அன்பை வெளிக்காட்ட தெரியவில்லை என்று! என்னைப்போல் !!!!!!!!
விருப்பமுடன்
விக்ரம்.