030 --கொடும்போரை அழியீரோ ?

மரத்திடுமே நெஞ்சம்!
மரத்திடுமே விழிகள்!
மங்கைஎன் மனமுமே
மரணத்தின் மஞ்சம்!

மக்களைக் கூட்டியே
மந்திரம் ஓதியே
அக்கினி சாட்சியாய்
அவர்கைப் பிடித்ததேன்?

ஆயிரம் ஆசைகள்
ஆயிரம் கனவுகள்
அன்பரின் கைகளில்
அடைக்கலம் கொடுத்ததேன்?

பாவியான் நினைத்திலன்!
பயணத்தைத் தடுத்திலன்!
அத்தனை யும்விதி
ஆகுமோ? துடிக்கிறேன்!
அதற்குமே சாவினை
அளிப்பவர் இல்லையே!

கணத்தினில் வருவதாய்க்
கையசைத் தகன்றவர்!
பிணக்குவி யல்,எனப்
பெயருடன் வந்ததேன்?

நரபலி கேட்பவர்
நம்முள்,ஏன் உள்ளனர்?
மாமிச வேட்கையில்
மனிதர்,ஏன் அலைகிறார்?
சாமியே! கொலைவெறிச்
சாத்தான்கள் பிறப்பதேன்?

மங்கலமாய் வந்தவனை
மரணிக்க விட்டுவிட்டுச்
செங்கலின் சூளையினில்
செத்துச் செத்து வாழ்வதேன்?
பொங்குகின்ற எரிமலையில்
பொழுதுக்கும் நிற்பதேன்?

ஊரைத்தான் பழிப்பேனோ?
உறவுகளைக் கழிப்பேனோ?
யாரைத்தான் பழிசொல்வேன் ?
யாரைநான் அழிஎன்பேன்?
வேர்களையே பிடுங்கிவிட
விழுதுகளும் பிறப்பது,ஏன்?

ஈரப் புடவைதனை
இடுப்பில் சுற்றிவைத்துக்
காரிகைகள் என்போலக்
கனவுகளாய் வலம்வரவோ?
கோரப் பசிகொண்ட
கொடும்போரை அழியீரோ?
-௦-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (15-Aug-12, 10:04 pm)
சேர்த்தது : vasanthimanaalan
பார்வை : 146

மேலே