சிவந்த முகம்
(குறிப்பு: இச்சிறு சிறுகதை சுய வன்முறையுடன் கூடிய மனப்பிறழ்வை விவரிக்கிறது. எனது மனப்பிறழ்வு வகைக் கதைகளில் இதை முதலாவதாகக் கொள்ளலாம். மார்ட்டின ஸ்கொர்சேசியின் Big Shave குறும்படத் தாக்கத்தில் எழுந்தது)
அவ ரொம்ப அழகா இருப்பா. சிரிச்சா ரொம்ப ரொம்ப அழகாயிருப்பா. இல்லைன்னு நீங்க யாராவது சொல்லலாம். ஆனா எனக்கு அவ அழகுன்னு தான் தோணிச்சு.
நான் அவள லவ் பண்ணிணேன். நாட்கணக்கா, வாரக்கணக்கா இல்ல. நாலு வருஷமா! ஆனா அவகிட்ட இன்னும் சொல்லவேயில்லை. சொல்லுறதுக்கான தைரியமில்ல.
வேலைவெட்டி எதுவுமில்ல. கல்யாணம் பண்ணினாலும் எப்பிடிக் காப்பாத்துறதுன்னு தெரியல. அதனால தான் அவள்ட்ட சொல்லல.
அந்த கம்பெனில இருந்து லெட்டர் வந்துது. அடுத்த மாசம் வந்து சேரச் சொல்லிட்டாங்க. மாசம் இருவத்தையாயிரம் சம்பளம். அதிகமில்ல. இருந்தாலும் ரெண்டு பேருக்கு அது போதும். அவளும் வேல பாத்துட்டு இருந்தா. அவள்ட்ட போய் என்னோட லவ்வச் சொல்லணும்.
சொன்னேன். என்னோட மூஞ்சிய உத்துப் பாத்தா. சிரிக்கத் தொடங்கிட்டா. "எப்பயாவது உம்மூஞ்சிய கண்ணாடில பாத்திருக்கியாடா? நான் ஒன்ன லவ் பண்ணனுமாக்கும்?". சிரிப்ப நிறுத்தல. அழுக வந்துது. அழல. ஆம்பளைங்க அழக்கூடாது.
பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லிருக்கலாம். எதுக்கு அவ்வளவு மோசமா?
நான் அவ்வளவு கேவலமாவா இருக்கேன்? தெரியல. எங்கிட்ட யாரும் அப்பிடிச் சொன்னதில்ல. அப்பா, அம்மா, பிரண்ட்ஸ் யாருமே சொன்னதில்ல. அவ மட்டும் ஏன் அப்பிடிச் சொன்னா? புரிஞ்சிருச்சு. நான் கறுப்பா இருக்கேன். எதுவும் பண்ண முடியாது. அது எந்தப்பு கெடயாது.
மூஞ்சில தாடி ரொம்ப மொளச்சுருச்சு. வேலக்கு போறதுக்கு முன்னாடி ஷேவ் பண்ணிரணும். கண்ணாடி முன்னாடி போய் உக்காந்தேன். அவ்வளவு கேவலமா இருக்கற மாதிரி படல. ஒருவேள பாத்துப் பாத்துப் பழகிட்டதால இருக்கலாம்.
ஷேவிங் ரேசரக் கன்னத்துல வச்சு இழுத்தேன். எங்கயோ வெட்டிருச்சு. செவப்பா, அவளோட நெறத்த விட செவப்பா ரத்தம் வெளிய வருது. அந்த எடம் செகப்பாயிருச்சு. இனி விடக்கூடாது. மூஞ்சி முழுசா செவப்பாவணும். அவள விட செவப்பாவணும். ரேசர வச்சு தாறுமாறா கோடு கிழிச்சேன். நெத்தி, கன்னம், மோவாய் எல்லா எடத்துலயும். மூஞ்சி முழுசா ரத்தம். கண்ணு அதுவாவே மூடுது. தடுக்கணும்னு நெனக்கறேன். முடியல. உள்ள ஒரே கறுப்பு.....