(ஹைக்கூ )தோழமை படைப்பாளிகளுக்காக - கே.எஸ்.கலை - v

தோழமை படைப்பாளிகளின் நலன் கருதி மீண்டுமொரு கட்டுரையை எனது இந்த தொடரின் ஐந்தாவது பாகமாக வெளியிடுகின்றேன். இது நான் இணையத்தில் படித்த ஒரு கட்டுரை. நிச்சயம் உங்களுக்கும் உதவும்.
______________________________________________
ஹைக்கூ எழுதுவது எப்படி
````````````````````````````````````````
எழுதுவதற்கு முன் விதிமுறைகள் பற்றி...

ஹைக்கூ - ஜப்பானிய கவிதை வடிவம். இதன் மிகச் சிறிய வடிவம் உலகம் முழுவதும் கவர்ந்து இப்போது உலகின் எல்லா மொழிகளிலும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லோரும் எழுத முயல்வதன் காரணம் ஹைக்கூ சிறியதாகவும், எளிமையாகவும், இயல்பானதாகவும், எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவற்றைப் புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகவும் இருப்பது தான்.
ஆனால் ஹைக்கூ-விற்கு தான் ஏராளமான விதிமுறைகள் உண்டு. கவிதைக்கு இடையூறாக இல்லாதவரை விதிமுறைகள் நல்லது தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல
'விதிமுறைகள் இல்லாத கவிதை, நெட் இல்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் போன்றது'. மேலும் பாஸோவின் கோட்பாட்டையும் (ஜப்பானின் சிறந்த ஹைக்கூ கவி) நினைவில்
கொள்வது நலம். 'விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள், பின் அதை மறந்து விடுங்கள்'

மறப்பதற்கு முன் விதிமுறைகளைக் கற்பது அவசியம்.

எத்தனை விதிமுறைகள்?

ஒரு சாதாரண உரைநடை வாக்கியத்தை மூன்று வரிகளில் உடைத்து எழுதினால் ஹைக்கூ ஆகி விடுமா? என்ற கேள்விக்குக் கூட நேரடியாக பதில் கூற முடியாத அளவிற்கு இதன் விதிமுறைகள் மாறி விட்டன.

ஹைக்கூ-விற்கு விதிமுறைகள் மிக அதிகம். எல்லா விதிமுறைகளையும் மொத்தமாக பின்பற்ற யாராலும் இயலாது. பல விதிமுறைகள் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே சந்த்தில் பின்பற்ற முடியாதாவை. ஆகையால் எழுதுபவரே தனக்கு ஏற்ற விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு ஏற்ற சில விதிகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்கள், பாதிப்புகள், உணர்வுகளை எழுதத் தொடங்குங்கள். விதிகளை மீறாதீர்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் உங்களுடைய எல்லா ஹைக் கூவும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்வீர்கள்! அப்படி உணர்ந்தால் உங்களுடைய டென்னிஸ் நெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று பொருள். மேலும் ஒன்றிரண்டு விதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பிடித்த ஹைக்கூ கவிஞரின் கவிதைகளில் இருந்து நீங்கள் உணர்ந்து கொண்ட விதியாக கூட இருக்கலாம்.

இதோ சில விதிகள்.
`````````````````````````````
*ஒரே வரியில் 17 சொற்கள்.

*மூன்று வரியில் 17 சொற்கள்.

*மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.

*சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.

*மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.

*ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.

*மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.

*வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.

*எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.

*உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.

*தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.

*ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.

*உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.

*இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).

*எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.
***
(நன்றி - இணையம்.)
`````````````````````````````````````````````````````````````````````````
மேலும் சில நல்ல தகவல்கள் திரு.அகன் அவர்களின் "படைப்பாளிகள் கவனத்திற்கு-பகுதி 8 " எனும் படைப்பில் உள்ளது.

உங்களோடு சேர்ந்து நானும் படித்துக்கொள்ளும் ஒரு பாடம் இது. இந்த பதிவை வாசித்து நீங்கள் உங்கள் கருத்து பதிவினை செய்துவிட்டு போவது உங்கள் உள்ளத்தின் இஷ்டம்...இல்லை என்றாலும் எனக்கில்லை கஷ்டம்...நஷ்டம்.
***
அடுத்த கட்டுரையில் சந்திக்கின்றேன்.

அன்புடன்
கே.எஸ்.கலை.

எழுதியவர் : கே.எஸ்.கலை (31-Aug-12, 8:55 pm)
பார்வை : 194

மேலே