மழை வரும் நேரம் (கற்புமேகத்தின் சீமந்தம்)

தெற்குத்திசையில்
மழையாம்....
மின்னல்
பொற்சலங்கையாயும்
இடி
பொன்மேளமாயும்
தெற்கத்தி பெண்ணுக்கு
சீமந்தக்கடனாம்!
மாமன் மைத்துனனாய்
ஆளங்கட்டி பூக்கள்
ஆசிர்வதிக்கும்!
வான்முரத்தில்
புடைத்த
ஒருநிலவு அவள்
வயிற்றினுள் தூங்கும்!
கிழக்கிலே
ஔவைவிளக்கேற்றி
ஊரானின்
பசியமர்த்த
உலக்கிலே
ஒருநெல்
உலை கொதிக்கும்!
வடக்கிலே
வாடைக்காற்றும்
தெற்கிலே
சூரைக்காற்றும்
சூது விளையாடும்!
உடுக்கையும்உறுமியும்,
உரலும்
உலக்கையும்,
மருதாணி இடித்து
வந்து
மஞ்சள் பூசிவிட்டு
போகும்!

அய்யகோ! அது
ஓலையில் கட்டிய
ஏழைக்கொட்டகை!

நாட்டைக்காக்கும்
ஓட்டை மாளிகை!
சீமந்தமாயினும்
தன் வீட்டை மறந்து
காட்டினைக்காக்கும்
கருணை மாளிகை!

அய்யகோ! அது
கண்ணீர்
விடப்போகிறதே!

கொணர்ந்த
கோடிப்பவளங்களையும்
பூட்டி
கோட்டை நாற்காலியில்
கொள் ளழகாய்
சிரிக்கிறாள்
சீமந்தக்காரி!

வானவில்வளையல்
போட்டு
மண்வாசமாய்
வீசப்போகிறாள்
சீமந்தக்காரி!

வெள்ளிச்சரிகை
கட்டிக்கொண்டு
வெட்டகப்படுகிறாள்
சீமந்தக்காரி!
அய்யகோ! அது
உப்பளத்தில்
உறுவி விழுந்து
உடற்கொப்பளமாய்
கொப்பளிக்கும்
உப்புச்சரிகை என்பதை
மறந்து விட்டாளோ
சீமந்தக்காரி!

கண்மை
பூசிக்கொண்டு
விழியை நெளிக்கிறாள்
கருக்களில்
காதல்கொண்டு
முகப்பருக்களை
மறைக்கிறாள்!
இவனோ
தெருக்களை
தேடிப்போகும்
தேவன்
என்பதை மறக்கிறாள்
சீமந்தக்காரி!



அலங்காரம் செய்தும்
சீமந்தம்
தடையானது!

அய்யகோ!

கற்புமேகம்
மழையின் கண்ணீரால்
கருக்கலைநது
போனது!...

கடைசியாய்

தெற்கத்திய
பெண்ணுக்கு சீமந்தம்
மீண்டும்
மேற்கத்திய திசையில்
மெல்ல மெல்ல
கூடுகிறது...

எழுதியவர் : ருத்ரா (4-Sep-12, 1:06 pm)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 190

மேலே