நான் செத்துத் தொலைந்தாலென்ன?
அன்பு காட்டவொரு
====ஆள்தேடி ஆள்தேடி
என்பு உருகாமல்
====என்னாவி பிரியாதா?
உலகமே என்கண்ணுக்(கு)
====அழகாகத் தோன்றுதல்போல்
உலகத்தின் கண்ணுக்கும்
====நான்தோன்றக் கூடாதா?
கல்லிலும் தெய்வத்தைக்
====காண்பவர் உலகத்தில்
என்மனதைக் காண்பதற்கு
====ஒருவரும் கிடையாதா?
உறவுக்குள் எல்லோர்க்கும்
====உலகைவைத்த இறைவனவன்
எனக்கென்று ஓர்உறவை
====உலகில்தரக் கூடாதா?
ஒருபெண்ணின் மடிமீது
====தொடங்கிய என்வாழ்வு
மறுபெண்ணின் மடிமீது
====முடிந்துவிடக் கூடாதா?
"அம்மா! அம்மா!"என
====அழுது என்நெஞ்சின்
விம்மல் தான்தணிய
====மடிஒன்று கிடைக்காதா?
தாயின் கர்ப்பத்தில்
====வாய்த்த கண்ணுறக்கம்
தீயில் வேகும்வரை
====இனிஎனக்கு வாய்க்காதா?
என்மூச்சுக் காற்று
====நிற்கின்ற நாள்வரையில்
என்வாழ்வில் வீசும்
====புயல்காற்று நிற்காதா?
கேள்விக் குறியாகிக்
====காண்பவர் கண்களுக்குக்
கேலிப் பொருளான
====என்வாழ்க்கை முடியாதா?
தண்ணீர்க் குடமுடையச்
====சுடுகாடு சேரும்வரை
கண்ணீர்க் குடமுடையும்
====கன்னங்கள் ஆறாதா?
பாடை பூப்பூக்கும்
====நாள்மட்டு மென்வாழ்வில்
கோடை முடிந்துவொரு
====வசந்தமும் வாராதா?
என்கட்டைச் சுடுகாட்டில்
====எரிகின்ற நாள்மட்டும்
என்நெஞ்சில் எரிகின்ற
====நெருப்பும்தான் அணையாதா?
எல்லோர்க்கும் சுமையாக
====இன்னும் வாழ்வதற்கு
நால்வர்க்குச் சுமையாக
====நான்போகக் கூடாதா?
பாத்திரம் அறியாமல்
====நடிக்கவந்த வாழ்க்கையெனும்
கூத்தும் தான்முடிய
====நாள்வந்து சேராதா?
----------ரௌத்திரன்