தரிசனம்
காலை 7 மணி முதலே அம்மாவின் புலம்பல் ஆரம்பித்துவிட்டது, " ஆடி 18 குலதெய்வம் கோவிலுக்கு போடான்னா கேக்கமாட்டிக்கிறான் நீயாவது போக சொல்லு" என் மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார். இரவு படித்து பாதியில் வைத்த புத்தகம் வேறு முதுகில் உறுத்திக்கொண்டிருந்தது, தூக்கம் தொலைந்தது இனி என்ன முயன்றாலும் தூங்கமுடியாது என்று எழுந்தேன். ஹாலுக்கு வந்தால் மட்டுமே கிடைக்கும் காபி இன்று என் அறைக்கே வந்தது, "என்னங்க அம்மா இவ்வளவு சொல்றாங்களே நமக்கு இல்லாட்டியும் பிறக்கபோற குழந்தைக்காவது கோவிலுக்கு போயிட்டு வரலாம் இல்ல" மனைவியின் செண்டிமெண்ட் அம்பு ஆழமாக தைத்தது.
புறப்பட்டேன், மல்லூர் அருகில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் தான் எங்களது குலதெய்வம் கோவில்.
சிறு வயதில் ஆசையாக குடும்பத்துடன் இட்லியும், தக்காளி சட்டினியும், கட்டிக்கொண்டு பஸ்சில் அழகிய வயல்களையும், மரங்களையும் ரசித்துகொண்டே சென்ற பயணம். இன்றோ மோட்டார் சைக்கிளில் தனியாக நிழலுக்கு ஒரு மரம் கூட இல்லை, வெறும் வீட்டு மனைகளாக! " ஏன்டா ரோடு போட எல்லா மரங்களையும் வெட்னிங்களே பதிலுக்கு புதுசா நட்டு வச்ச என்ன?" என்று வெறுப்பாக முகம் கருக( ஏற்கனவே கருகியதுதான்) கோவிலை அடைந்தேன்.
வெளியில் சில கட்டில் கடைகள், வழக்கமாக இருக்கும் பத்து பிச்சைகாரர்கள், மன்னிக்கவும் வயதான பாட்டிகள். வரும்போது இவர்களை பற்றி யோசிப்போம் என்று, இவர்களை இப்படி விட்ட அவர்களது பிள்ளைகளை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே உள்ளே சென்றேன்.
ஓடி விளையாடிய பழைய நியாபகங்கள், "கண்ணு அங்கதாண்டா உனக்கு மொட்டை அடிச்சோம். அதோ அங்கதான் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படம் எடுத்தாங்க", அம்மாவின் குரல் காதுகளில் ஒலித்தது. சரி வந்த வேலையே பார்ப்போமென்று வரிசையில் நின்றேன். அனைவர் கையிலும் பூஜை சாமான். "அதான் எல்லாரும் சாமிக்கு போடுறாங்களே அப்புறம் ஏன் நாமும் வாங்கணும் பூசாரிகிட்ட ஒரு பத்து ரூபா கொடுத்துட்டா போதும்", மனசுக்குள் ஓடியது.
பூசாரியோ ஒரு இளைஞனிடம் பத்து ருபாய் பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒரு எலுமிச்சை பழத்திற்கு. இவருக்கு ஏன் காசு கொடுக்கணும்? வெறும் விபூதி மட்டும் வாங்கி பொட்டலம் கட்டிகொண்டேன் அம்மாவை திருப்திபடுத்த. அம்மாவுடன் வந்தால் ஒருமணி நேரமாவது ஆகும். இன்றோ வெறும் 3 நிமிடத்தில் முடித்த சந்தோஷத்தில் வண்டியை எடுத்தேன். தூரத்தில் என்னை பார்த்த பாட்டிகள் எழுந்தார்கள். வழக்கமாக அம்மா 10 ரூபாய் கொடுத்து "எல்லோரும் எடுத்துக்குங்க" என்பார். சண்டையில்லாமல் பிரித்துகொள்வார்கள் அவ்வளவு ஒற்றுமை. யாரையும் தொந்தரவு செய்து பணம் கேட்க மாட்டார்கள்.
பூசாரிக்கு கொடுக்க நினைத்த 10 ருபாய், அம்மா வழக்கமாக கொடுக்கும் 10 ருபாய், ஆக 20 ருபாய் கொடுக்கலாமென்று அவர்கள் அருகில் வண்டியை நிறுத்தி இறங்கினேன்.
திடீரென்று யோசனை, "பாட்டிகளா என் பொண்டாட்டி மாசமா இருக்கா நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு வாழ்த்துங்கள்" என்று தலைகுனிந்து நின்றேன். அத்தனை பேர் கண்களிலும் ஒரு ஆச்சர்யம். அப்படியே என்னை சுற்றி நின்று, என் கையை பிடித்து, "ராஜா நீ நல்லா இருக்கணும் உனக்கு நல்லபடியா ஆம்பள புள்ளயா பொறக்கும்" ஆளாளுக்கு வாழ்த்த ஆரம்பித்தார்கள். சிலர் கண்களில் கண்ணீர் வேறு!.
ஒரு தெய்வத்தை வழிபட வந்த எனக்கு பத்து தெய்வங்கள் ஆசி வழங்கிய சந்தோசத்தில் 50 ரூபாயாக காணிக்கை செலுத்திவிட்டு மனநிறைவோடு புறப்பட்டேன்.
ஆஹா என்ன அருமையான தரிசனம்.
விக்ரம்.