காதல் செடி
நீர் பாய்ச்சிய தோட்டமாக
வாழ்க்கையை மாற்றிவிட்டு
நெடுதூரம் சென்றுவிட்டாய்
வரட்சியை மட்டும் தந்து...
வரண்டுபோன கனவுகளும் - உன்
இரண்டு பெரிய கண்களைத்தேட
மனசாட்சி என்னை
திட்டித்தீர்த்தது,
நீ மாற்றானுக்கு சொந்தமென்று.
அலைகின்ற கடலிலே
சிதறுகின்ற நுரையாக
தோன்றுவதும்,தொலைவதுமாய்
உன் நினைவுகள் பெண்ணே...
நிலையில்லை என்றாலும்
நீங்காது நினைவுகள்,
நுரையில்லா கடலாக
நான் மட்டும் சாத்தியமா?
நீ தந்த நினைவுகளில்
வாய் நனைக்கும் இக்
காதல் செடி,
நினைவுகளும் தீர்ந்துவிடின்
கருகிவிடும் தீக்குழித்து.
மழையொன்று வாராதா?
மறு ஜென்மம் கூடாதா?
உறங்குநிலை துறந்து நானும்
துளிர்விடத்தான் மாட்டேனா?
முட்டியெழ மாட்டேனா?
நீயும் முகர்ந்து கொள்ள மாட்டேயா?
தட்டிக்கழித்த என்னையும் நீ
தடவிக்கொள்ள மாட்டேயா?
ஏக்கத்தில் உதிர்ந்தபடி
தேடுகிறேன் மழையொன்றை!

