தாத்தா பாட்டி கதை - கே.எஸ்.கலை

தள்ளாடும் வயதிலும் தடுமாறும் நடையிலும்
உள்ளன்புக் குறையாமல் உறவாடும் உறவுகள்
இந்தக் கலியுகத்தில் காணாமல் போன கதை
கசக்கின்ற மெய்தானே?
நரை கண்ட கேசமும் வரி கண்ட தேகமும்
வலி கொண்ட வாழ்கையை வடிவமைக்க-
வழி மாறும் உறவுகள் குழி தோண்டிப் போனது
விழி நீரை உருவாக்கும் இழி செய்தி தானே?
மடங்களில் நடமாடும் பிணம் – அந்த
மனங்களில் விளையாடும் ரணம்.
தெருவில் தள்ளாடும் கணம் – அங்கே
தெளிவாய் குமுறும் மனம் !
பெற்றதுகள் பெற்றவைக்கு சொல்ல
கற்றதும் பெற்றதும் நிறைய இருக்க-
முடியாத வயதில் முதியோர் மடங்களில்
அயல் நாற்காலி உறவோடு அந்தநாள் நினைவுகள் !
காலால் நடந்து களைத்துப் போனதால்
கையால் நடந்து கையேந்தி வாங்கி-
தளர்ந்துப் போன உடம்பும்,
உலர்ந்துப் போன உணர்வும்
வாழ்க்கை நடத்துகிறது தெருவோர நிழல்களில் !
கட்டியணைக்கா முத்தங்களும்
கசக்கும் ஆங்கில வார்த்தைகளும்
வாரம் ஒருமுறை கணணித் திரையில்–இது
படித்தவன் வீட்டுச் சிறையில் !
இறுகிப் போன இதயங்களில்
இறந்துப் போன கனவுகள்
இருண்டுப் போன வாழ்கையில்
இம்சை தரும் நிகழ்வுகள் !
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
தந்தது மனதுக்கு நிறைகள்- இன்றைய
தாத்தா பாட்டியின் கதைகள்
தணலாய்ச் சுடுகிற கறைகள் !
_______________________________________________
(இந்த தலைப்பு அஹமது தோழர் எனக்கு வழங்கியது...திரு.அஹமது அலி அவர்களும் நானும் செய்துக்கொண்ட ஒரு உடன்படிக்கைக்கு அமைவாக எழுதப்பட்ட கவிதை. “தாத்தா பாட்டி கதை” - “ஒரு தலைப்பு இரு கவிதை” என்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவு இது...)