திருமண மலர்கள் தருவாயா???

அவசரக் கல்யாணம்!
அன்னைக்கே செய்யச் சொன்னார்!
அனைத்தும் அறிந்த ஜோஸியர் பிரான்!

அன்றொரு நாள் கோயிலில!
அன்பு மச்சான் பார்த்தாராம்!
அன்பு கொண்டேன் உன்மேலே!
அப்படின்னு வந்து நின்னார்!

அருமை மச்சான் கேக்கயில!
அப்ப ஆமான்னு சொல்லிப்புட்டன்!
அந்தஸ்து கருமமெல்லாம்!
அப்புறம் தானே தடையாப் போகும்!

அந்த வேலி போட்டாங்கப்பா!
அவரும் தான் என்ன செய்வார்!
அமைதியாக ஒன்னு சொன்னார்!
அவுஸ்திரேலியா போகப்போறன்!
அரை தசாப்தம் கழிச்சு வாறன்!
அப்ப தானே நாம வாழ்வில்!
அனைவரும் போல ஜெயிக்கலாமுன்னு!

அம்புட்டு ஆசையயும்!
அப்படியே பொத்தி வச்சி!
அன்னைக்கு சரின்னேன்!
அத நெனச்சு இன்னைக்கு!
அழுது பொலம்பி நிக்கிறேனே!

அன்னைக்கு என் கல்யாணம்!
அனைவரும் கூடி செஞ்சாங்க!
அந்த மாசம் இருவரையும்!
அப்படியே பிரிச்சிட்டாங்க!
அடுத்த மாசம் ஆடி மாசம்!
அன்னைக்கு தாலி பிரிச்சு!
அடிம என் கழுத்தில் போட்டுட்டு!
அவரும் பறந்து போனாருங்க!

அவருக்கு என்மேல கொள்ளப்பிரியம்!
அது எனக்கு மட்டும் தெரியுமுங்க!
அம்புட்டு பேரும் அவர!
அவமானப் படுத்தினாங்க!
அவரு ரொம்ப படிக்கலயே!
அம்புட்டு பண்மில்லயே!
அடக்கம் இருக்குங்க!
அவருக்கு ஆடம்பரம் இல்லங்க!
அவர்மேல என்ன கோவம்!
அதத்தானே யோசிக்கிறேன்!
அவரப்பத்தி தூத்தாத ஒருத்தன் கூட!
அந்த ஊரில் இல்லங்க!

அவசரப் பட்டு நானும்!
அன்னைக்கொரு முடிவெடுத்தன்!
அரலி வெத எடுத்து வந்து!
அரச்சி அத வாயில் போட்டு மென்னுபுட்டன்!
அந்த உலகம் விட்டு நானும்!
அலைகிறேனே ஆவியாகி!

அஞ்சு வருஷம் முடிஞ்சி போச்சி!
அத்தானும் வாறாராமே!
அவர பாக்க ஆசயிருக்கு!

அன்னைக்கு கட்டின பொடவயில!
அழுத்த மடிப்பு கசங்கலயே!
அவரு வச்ச மல்லிகயும்!
அழகு கூட மாறல்லயே!
அவரு கட்டின தாலியில!
அந்த மஞ்சள் வெளுக்கலியே!
அத்தனயும் கண்ணுக்குள்ள!
அப்படியே பொத்தி வச்சி!
அவசரத்தில் ஆவியானேன்!

அழுகிறன் என் புதையல் மேல!
அவருக்கு புடிச்ச மல்லிக கொடிய!
அன்போடு பாத்துக்கிட்டு!
அழகு மல்லி கொடித்தாயே!
அள்ளி நீயும் தருவாயா
அந்த திருமண மலர்கள் கொஞ்சம்???


மனதுக்கு பிடித்த வாழ்வு தேடி
மக்களினால் பிரிக்கப்பட்டு
மரணமதை சாடி விட்ட
மங்கையர்களுக்காக ஒரு குரல்- அச்சலா.

(2003 ம் ஆண்டு காதலுக்காக உயிர் நீத்த எங்கள் பள்ளித் தோழிகள் லலிதா, ரஜனி ஆகியோருக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)

எழுதியவர் : அச்சலா (16-Sep-12, 11:36 am)
பார்வை : 224

மேலே