வீயாரெஸ்
நகைகளை எல்லாம் அடகுவைத்தாயிற்று. ஒரு வீடு இருந்தது, அதையும் விற்றாயிற்று. கைமாத்து கால்மாத்தேல்லாம் வாங்கிப் பெயரை சீரளித்தாயிற்று. நல்ல வேலையை VRS ஆசையில் விட்டாயிற்று. கடன் தொல்லை மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஏன் எல்லாமே எனக்குமட்டுமே இப்படித் தவறாகவே நடக்கிறது. ஒரேயொரு தவறு. குடியும் சீட்டும். VRS வாங்கினபின் அவனின் வாழ்க்கை குடிப்பதிலும் சீட்டு விளையாடுவதிலுமே கழிகிறது. தற்பொழுது ஒரு ஹோட்டலில் மேனேஜர். கொஞ்சம் குடியையும் சீட்டையும் குறைத்துக்கொண்டான். இப்பொழுது சனி மாலை முதல், ஞாயிறு நடுஇரவு வரைதான். திங்களில் இருந்து ஒழுங்காகிவிடும். அழகான பொறுப்பான மனைவி. நடிகை ரோஜாவைப்போல் தளதளவென்று இருப்பாள். இரு மகன்கள், ஒரு மகள், மூத்தவனை செலவழித்து எஞ்சினியரிங் சேர்த்துவிட்டான். மகளுக்கு நல்ல இடத்தில் மணமுடித்து கொடுத்துவிட்டான். இளையவனை எப்படியாகிலும் டாக்டராக்கிவிட வேண்டும். பணம் வேண்டும் எல்லாவற்றுக்கும், வட்டி கட்டவும். வட்டி தரமுடியாததால் ஒரு முறை தேவர் மிரட்டிவிட்டு சென்றார்.
இப்பொழுது அதுவல்ல பிரச்சினை, இந்த உலகில் அவனுக்கு யாரும் கடன்கொடுக்கத் தயாரில்லை.
மனைவி, அவள் அந்த வயதிலும் மிக அழகாய் இருந்தாள். வீட்டில் இருந்துகொண்டே திருமணப் பெண்களுக்கு அலங்காரம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பராமரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். அவன் மேனேஜராய் வேலை செய்யும் ஹோட்டலிலேயே ரிசப்ஷனிஸ்ட் வேலை காலியாகி, அவளும் அந்தவேலையில் அங்கேயே சேர்ந்துகொண்டாள். இப்பொழுது அவர்களுக்கு இரண்டாவது மகனின் படிப்புக்கு பணம் வேண்டும். 5 லட்சங்கள் தேவை.
ஒருநாள் அந்த ஹோட்டலில் ஒரு பெரிய கம்பெனியின் மீட்டிங் நடந்தது. பணக்கார டைரக்டர்கள் கலந்துகொண்டனர். மேனேஜரின் கண்களில் டைரகடர் ஒருவர் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தார். அந்தப் பணக்காரர் மட்டும் அவர்களின் ஹோட்டலில் பலமுறை தங்கியிருந்தது ஞாபகம் வந்தது. விசாரித்தபொழுது இந்த மீட்டிங் ஏற்பாடெல்லாம் அவரின் ஏற்பாடுதானாம். அந்தப் பணக்காரரை இப்பொழுது நெருங்கிச் சென்று அவருடன் பழகினான். அவரின் ரூமுக்குச் சென்று சந்தித்துப் பேசினான். ரொம்பவும் கவனித்தான். கொஞ்சம் அவருடன் நெருக்கமாய் பழக்கப் படுத்திக்கொண்டான். அவர் ஒரு ஜாலிப்பார்ட்டி, பெரும் பணம்படைத்தவர். நல்ல நகைச்சுவையாய் பேசுபவர்.
வட்டிகட்டவேண்டும், பையனுக்கு பீஸ் கட்டவேண்டும். மொத்தமாய் ஒரு ஆறு லட்சமாவது உடனடியாகத் தேவை. அவரிடம் சென்று கேட்கலாமா என்றுகூட நினைத்தான். மனைவியுடனும் ஆலோசனை செய்தான். என்ன செய்ய ஒன்றுக்கும் அடைபடவில்லை. ஒரு முழுவாரம் சிந்தனையிலேயே கழிந்தது.
அன்று அந்தப் பணக்காரர் வேறுபல நண்பர்களுடன் வந்து தங்கியிருந்தார். அவர்கள் எல்லோரும் டைனிங்கில் அரட்டையடித்துக்கொண்டு உணவருந்தினர். யோசித்தான், அந்தநேரம் அவனின் மனைவியும் அங்குவர அவளை அந்தப் பணக்காரருக்கு அறிமுகம் செய்துவைத்தான். குடும்ப நண்பர்கள்போல் சேர்ந்துகொண்டு அரட்டையடித்தனர்.
பணக்கார நண்பர்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்களுக்குள் விளையாட்டாய் ஒரு போட்டி. அவன் மனைவி ரிசப்ஷனிஸ்ட் ஐ முத்தமிட்டால் பத்துலட்சம் தருவதாய் பந்தயம். போட்டோவுடன் காட்டவேண்டும். அதுதான் ஒரே நிபந்தனை. அன்று இரவு மேனேஜர் அவரின் அறைக்கதவைத் தட்டினான். கொஞ்சநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தான். பின் தன் கடன் மற்றும் தேவைகளை அவரிடம் சொல்லிவிட்டு, ஆறு லட்சம் தேவையையும் அவரிடம் சொன்னான். வருடம் ஒரு லட்சம் வீதம் திருப்பி அடைத்துவிடுவதாயும் சொன்னான். அவரும் தருவதாய் சொல்லிவிட்டு ஒரு நிபந்தனை இட்டார்.
அதாவது ஒருநாள் முழுப் பகல் அவள் மனைவி தன்னுடன் இருக்கவேண்டுமென்றும், அன்று, தான் விரும்புவது என்னவேண்டுமானாலும் அவளை செய்துகொள்வேன் என்றும், சம்மதித்தால் தருவதாகக் கூறினார்.
இது முடியாதது என்று அவரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான். மனைவி அவனின் சோகத்தைக் கண்டுகொண்டு ஏனென விசாரித்தாள். முழுவதையும் சொன்னான். இருவரும் தூங்கவில்லை. காலையில் ஒருவாறு முடிவு செய்தனர். ஒருநாள்தானே, நம் கடன் முழுவதும் அடைபட்டு நிம்மதியாய் பின்னாளில் இருக்கலாமே என்று இருவரும் சரியென்று முடிவு செய்தனர்.
அவரிடம் சென்று சரியென்று சொல்லியும் அதற்குத் தயார், ஆனால் பெங்களூர் சென்றுவிடவேண்டும் என்றும் சொன்னான். உள்ளூரில் யாரும் பார்த்துவிடக் கூடாதே. எந்தநாளில் என்பதுவும் முடிவு செய்யப்பட்டது.
அன்று காலையிலேயே அவர் பணம் தந்து அவளை ப்ளைட்டில் பெங்களூர் அழைத்துச் சென்றார். அவனுக்கு மட்டும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. பணத்தை எடுத்துக்கொண்டு தன்னின் நிலையை நினைத்துநினைத்து அழுதான். இவன் தவறு செய்யும் எல்லா நேரமும் அவள் அவனை எப்படியெல்லாம் மாற்றித் திருத்தியிருக்கிறாள், சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
ஏழுக்கு பெங்களூர் சென்றனர். உணவு ஒரு ஸ்டார் ஹோட்டலில். எல்லா சுற்றுலா இடங்களுக்கும் அவர் அவளை அழைத்துச் சென்றார். சிலநேரங்களில் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு கூலாக அரட்டையடித்துக்கொண்டு நடந்தார். ஒரு நல்ல நண்பன்போல நடந்துகொண்டார். அவளுக்கு அவரை இப்பொழுது மிகவும் பிடித்துவிட்டது. காமுற்றாள். எதிர்பார்க்கத் துவங்கிவிட்டாள். ஆனாலும் அவருக்கு அப்படியொரு எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை. அவளின் அழகை மட்டும் அடிக்கடி புகழ்ந்தார். கடைசியில் ஒரு கோவிலுக்கு அவளை அழைத்துச் சென்றார். அங்கு சாமியெல்லாம் கும்பிட்டபின் ஹோட்டல் அறைக்குச் சென்றனர். கொஞ்சம் சுவையாக அரட்டையடித்தார்கள். கிண்டலும் கேலியுமாய் சென்றுகொண்டிருந்தது. அவள் மிகவும் எதிர்பார்த்திருந்தால் இப்பொழுது. அவர் ஒரு போட்டோ உன்னுடன் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே சட்டென்று கட்டியணைத்து முத்தமிட்டார். போட்டோவில் பதிவானது. கொஞ்சநேரம் முத்தத்தை அனுபவித்துவிட்டு திரும்பிவந்தபின் பிரிந்தனர். அவளுக்கு ஏமாற்றம், வெளிக்காட்டவில்லை.
அவர் போட்டியில் வென்று பத்து லட்சங்களை பெற்றுக்கொண்டார். எப்பொழுதும் அவருக்கு வெற்றிதான்.
அவள் அவனுடன் நட்பாய் இப்பொழுது பேசிக்கொள்வாள், உட்கொண்ட காதலுடன்.