ஆடும்... இலையும்...

அன்று
அவள் தூங்கும் முன்பு,
எனக்கோர் கதை சொன்னாள்
என் ஐந்து வயது மகள்!
அது ஒரு குட்டிக் கதை...
ஒரு இலைக்கும் ஒரு ஆட்டிற்குமான
சிறு போராட்டத்தை
விவரிப்பதாக அது இருந்தது!
எங்கள் வீட்டுச் சாலையில்,
அவள் நடந்து சென்ற
அந்த மாலையில்
அது நடந்ததாம்!
வேலிக்கு அப்பால் இருக்கும்
சிறு மரத்திலிருந்து கிளை ஒன்று
வெளியே துருத்திக் கொண்டிருக்க,
அதன் நுனியில் துளிர்த்திருந்தன இலைகள் பல...
அவற்றிலிருந்து ஓர் இலை பறிக்க,
போராடிக்கொண்டிருந்ததாம் சிறு ஆடு ஒன்று,
தன் கால்களை வேலிக் கம்பிகளின்மேல்
பதித்து ஊன்றிக்கொண்டு!
இந்நிகழ்வை, கதையாக எண்ணிக் கொண்டு,
என்னிடம் சில சிறு கேள்விகளோடு
முடித்துக் கொண்டாள் என் புதல்வி!
சில, நிஜ மற்றும் நியாமான கேள்விகள்!
ஏன் வேலி போட்டு
அந்த ஆட்டோட சாப்பாட்ட மூடி வச்சிருக்காங்க?
அந்தச் செடி நல்லா வளரும்வரைக்கும்
ஆடு ஒரு ரெண்டு நாள் காத்திருந்தா,
கஷ்டப்படாம சாப்பிடலாம்ல?
கேட்டுவிட்டு உறங்கிவிட்டாள் அவள்...
மனிதத்தின் அடக்குமுறைகளையும்...
பசி உட்பட, இயற்கையின் விதிமுறைகளையும்
அவைகளோடு, அவளின் கேள்விகளின் நியாயங்களோடும்
உரையாடித் தூக்கம் தொலைத்தேன் நான்!