உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞான தங்கமே

தங்கமே என் தங்கமே
சுட்டால் பொன் சிவக்கும்
தங்கம் இல்லை என்று
சொல்லி விட்டால்
பெண்கள் கண்கள் சிவக்கும்
இல்லறத்தின் சுருதி கலைந்து விடும்
ஈயத்தைப் பாத்து இளிச்சுதாம்
பித்தளை
நகை கடை வீதியில்
தங்கத்தை பாத்து இளிச்சாலாம்
பொம்பளை
தாலித்தங்கத்தையும் வித்து
போதை தணியும் "புண்ணியவாளன்"பூமி
தமிழ் பூமி
கண்ணீரில் காத்துக் கிடக்குது
மாத்துக் குறையாத தங்கம்
மஞ்சள் தாலிக் கயிற்றோடு
ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்
வித்தவன் எல்லாம் நகை விற்கிறான்
கடை வீதிகளில்
அணிந்த நகைகளையும் வலையல்களையும்
விற்று பெற்ற மகனை படிக்க வைக்கிறாள் அன்னை கல்லூரி வீதிகளில்
நெல் போட்டால் நெல் விளையும்
பொன் போட்டால் பொன் விளையும் --இது
பொன் விளையும் பூமி என்பார்
வயல் நாட்டினில்
பொற்கொல்லன் பொய்யுரைக்க
மன்னவன் தவறிழைக்க
பொற்சிலம்புடைந்து தெரித்தது
மாணிக்கப் பரல்கள்
பொன் உடைந்து உண்மை உரைத்தது
எரி உண்டது நகரம்
எழுந்து நின்றது சிலப்பதிகாரம்
உண்மை போற்றி நின்றது
மாசற்ற மதுரைத் தங்கம்
செகொஸ்லாவாக்கியா நாட்டினிலே
ஆண்டவன் வீட்டினிலே பொன் மயம்
தண்ணீர் விழும் குழாயும் தங்கமயம்
சுட்டு வீழ்த்தியது மக்கள் தீர்ப்பு
சுட்டால் பொன் சிவக்கத்தான் செய்யும்
சுதந்திர நாடு சிவந்து உயர்ந்து நின்றது
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
வரம் பெற்றான் கிரேக்க மன்னன் மைடாஸ்
பெற்ற பெண்ணையும் தொட்டான்
அவளும் பொன் ஆனாள்
வருந்தி வருந்தி வறுமையுற்று மடிந்தான்
பொன்னையும் காதலில் பெண்ணையும் தொடர்பவன் வாழ்வில்
கண்ணீரே எஞ்சி நிற்கும்
முலாம் பூசிய பொய்களெல்லாம்
சொக்கத் தங்கம்போல் சமூக வீதியில்
பவனி வரும் நாடு நம் நாடு
தங்கத்துக்கு பெண்கள் குரல் கொடுத்தால்
சிங்கங்களும் அடங்கி விடும் வீடு
நம் வீடு
உன்ன நெனைச்சே பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
எத நினைச்சா இந்த நாடு உருப்படும்
தங்கமே ஞானத் தங்கமே
----கவின் சாரலன்