எங்கே திராவிடம் - தோழர் ரூபனின் கருத்துக்கு எனது பதில் (2)
தங்கள் கருத்தை படிப்படியாக இக்கட்டுரையின் மூலம் ஆய்வுக்குட்படுத்த விரும்புகின்றேன்.
“பைத்தியக்கராரே உங்களுக்கு என் பதில் நீங்கள் சொன்ன மானுடவியல் அடிப்படையில் இப்போதைய இந்தியாவில் யாருமே சுத்த திராவிடரும் இல்லை, சுத்தமான ஆரியரும் இல்லை. இந்த கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன் ஆனால் அதில் ஒரு திருத்தம் உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் கூட இப்போதைய இந்தியாவில் அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதை நிலைதான்”
தங்கள் முதற்கருத்து ஆரியர் திராவிடர் பிரிவினை என்பது நூற்றாண்டுகள் கடந்த போது மிக மங்கலாகிவிட்டது என்பது தான். ஒத்துக் கொள்கிறேன். இரண்டு இனத்தவர் ஒரே இடத்தில் வாழும் போது கலப்பு ஏற்படாமல் இருந்தால் அதை விட மிகுந்த ஆச்சரியம் எதுவும் இல்லை.
“இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஏற்படவேயில்லை. என்பது தவறு 19ம் நூற்றாண்டின் கடைசியில் பாரதியார் வ உ சி தேசியவதியாகத்தான் இருந்தனர் .”
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாரதியாரும், வ.உ.சியும் தேசியவாதியாகத் தான் இருந்தார்கள் என்கிறீர்கள். அந்த 'இறுதி' எதுவென்று நீங்கள் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. நான் அதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். பாரதியார் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத்துவங்கியது 1904ம் ஆண்டில் இருந்து தான். வ.உ.சி 1892ம் வருடத்திலிருந்து திலகரின் கொள்கைகளை ஆதரித்தாலும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கியது வங்களாப் பிரிவினைக்குப் பின்பு தான். அதாவது 1905ம் ஆண்டுக்குப் பிறகு. ஆனால் கால்டுவெல் 1891ம் வருடத்திலேயே இவ்வுலகிலிருந்து மறைந்து போனார். அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் 1875ம் வருடம் வெளி வந்தது. எனவே பெருகி வந்த தேசிய உணர்ச்சியைக் குறைப்பதற்காக கால்டுவெல் திராவிட ஆரியப் பிரிவினையை மூட்டி விட்டார் என்று சொல்வது அபத்தமானது.
“1858ல் இந்தியாவில் விக்டோரியா மகராணின் ஆட்சி கீழ் வந்தபோதே இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது “
அடுத்ததாக நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மகத்தான உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். அதிலிருந்து பெறும் முடிவு இது தான். விக்டோரியாவின் ஆட்சிக்கு முன் இந்தியா என்கிற தேசமோ, தேசியமோ இல்லை.
“திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பல்ல என்று சொல்லும் தாங்கள் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு என்று நூறாவது ஆண்டு விழா கொண்டாடும் திராவிடதலைவர்களை மறந்துவிட்டீர்கள் “
திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் ஆங்கிலத்தில் திராவிடம் என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் கால்டுவெல் தான் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள் அல்லது மறைத்து விட்டீர்கள்.
“திராவிட கருத்து ஏற்ப்படுவத்ர்க்கு முன்னே பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டார்” “
பாரதியார் திராவிடந் தோன்றுவதற்கு முன்பே சாதிகளை ஒழிப்பதைப் பற்றி எழுதி விட்டார் என்கிறீர்கள். திராவிடக் கருத்தின் முன்னோடியான அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியும் படித்துப் பாருங்கள்.
“திராவிட கருத்து ஏற்ப்படாமல் இருந்திருந்தாலும் சதிக்கொடுமைக்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தான் இருக்கும் “
இங்கே நீங்கள் வரலாற்றாய்வாளர்கள் செய்யக்கூடாத பிழையைச் செய்கிறீர்கள். இதுவரைக்கும் இருந்த வரலாறை வசதியாக மறந்து விட்டு, இப்படியில்லாவிட்டாலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்கிறீர்கள். அப்படிச் சொல்வதற்கு நீங்கள் கடவுள் அல்லவே.
'ஆரிய இனத்தை பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை தாசயுக்கள் இந்தப் பழங்குடியினர் இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள் என்பதற்கு வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை ' (நாமக்கல் கவிஞர் தமிழ் மொழியும் தமிழ் அரசும்)
அடுத்ததாக நீங்கள் ரிக் வேதத்தைப் பற்றி நாமக்கல் கவிஞரிடமிருந்து மேற்கோள் காட்டுகிறீர்கள். ரிக் வேதத்தைப் புரட்டிப் பார்த்தியிருக்க வேண்டியது தானே.
"Thou slewest with thy bolt the wealthy Dasyu" - Rig veda, Book first, Hymn 33:4, praising Indra.
"நீ செல்வந்தனாகிய தஸ்யுவை உனது வஜ்ராயுதத்தால் கொல்கிறாய்"- ரிக் முதல் புத்தகம் 33ம் துதிப்பாடல், இந்திரனைப் புகழ்வது.
இதிலிருந்து உங்கள் வாதம் எத்தனை பிழையானது என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
இதற்கு மேலும் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். அவற்றைக் கொண்டு ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் என்ற கட்டுரையைக் கூட நான் எழுதுகிறேன்.
“'வட இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர் கழுத்தை இன்னுஒருவர் நெருக்குவது போன்ற சூழ்நிலை இருக்கலாம் அது போலவே தென் இந்தியாவில் பிராமணர்களும் பிராமணர் அல்லாதோரும் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள் என்று கருதவேண்டாம்' இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு எழுதிய கடிதம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரிக்கத்தான் நினைத்தார்கள் “
இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு கடிதம் எழுதினார் என்று மொட்டையாகக் குறிப்பிடுகிறீர்கள். எப்போது எழுதினார்? எந்த சூழ்நிலையில் எழுதினார் என்பதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. நானுங்கூட சொல்லிக் கொள்ளலாம், மன்மோகன்சிங் எனக்குக் கடிதம் எழுதினார் என்று.
“தமிழ் தலிவர்களை தவிர திராவிட நாடு எல்லைக்குள் இருக்கும் மற்ற மாநிலங்கள் ஏன் ஏற்று கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி “
திராவிடத்தைப் பிற இன மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை நாம் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாம் நியாயப்பூர்வமான ஊகத்தில் வேண்டுமானால் ஈடுபடலாம். திராவிட இயக்கம் பிற மாநிலங்களில் வேரூன்றுவதற்கு முன்னாலேயே ஏற்பட்ட மொழிவழிப் பிரிவினை திராவிட இயக்க வேகத்தை அம்மாநிலங்களில் குறைத்துவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
“மேலும் விரைவில் தங்களுக்கு விளக்கமான பதிலை கட்டுரையாக தருகிறேன்”
தாருங்கள் காத்திருக்கிறேன்.