சுட்டிப் பூங்கா.நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

சுட்டிப் பூங்கா

நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் செல் 8903926173

வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் ரோடு ,சென்னை .18 விலை ரூபாய் 30
செல் 9841436213.

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குழந்தை இலக்கியமாக குழந்தைகளுக்கான ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது .பெரியவர்களும் படித்து மகிழலாம் .மழலைகள் பற்றிய மலரும் நினைவுகளை மலர்விப்பதோடு மகிழ்ச்சியும் தருகின்றன. ஹைக்கூ கவிதைகள் அளவில் மூன்று வரிகள்தான் .ஆனால் கருத்து ஆழத்தில் அளவிட முடியாதது. ஹைக்கூ கவிதைகளின் உணர்வுகள், தாக்கங்கள் பெரிது .நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களின் முதல் நூல் இது .மின்மினி இதழ் ஆசிரியர் ,கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரை அழகுரை .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் கவிஞர் வசிகரன் இவர்கள் இருவரும் தந்த ஊக்கத்தால்தான் இந்த நூல் வந்தது என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .

குழந்தைக்கு முத்தம்
குழந்தையின் முத்தம்
பின்னதே அடர்த்தியானது !

இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்த வாசகர்களுக்கு குழந்தைக்கு தந்த முத்தமும் ,குழந்தை தந்த முத்தமும் நினைவிற்கு வந்து, ஒப்பீடு நடத்தி கவிஞர் கூற்று உண்மை என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள் .இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .

கை நோகிறது
இறக்கினால்
மனம் நோகிறது !

உலகின் ஒப்பற்ற உறவான அம்மாவின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ .

குழந்தை எழுதியது
கியூட்டான ஹைக்கூ
அம்மா !

கியூட்டான என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்து அழகான என்ற அழகு தமிழ்ச் சொல்லை பயன் படுத்தி இருக்கலாம் .அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல் தவிர்த்திடுங்கள் .தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் செய்யும் தமிழ்க் கொலையை , தரமான படைப்பாளிகள் செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் .

திங்கட்கிழமை பூத்தாலே
வாடிவிடுகின்றன
பொம்மைகள் !

நல்ல ஹைக்கூ இது .குழந்தைகள் சனி ஞாயிறு பொம்மைகளோடு விளையாடும் .திங்கட்கிழமை வந்து விட்டால் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் .பொம்மைகளைப் பிரிகின்றோம் என்று குழந்தைகள் உள்ளம் நோகும் .கவிதைக்கு கற்பனை அழகு ! பொம்மைகள் வாடுவதாக எழுதியது படைப்பாளியின் திறமை .

தாய் உள்ளத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .தாயின் உச்சரிப்பை உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .

என்னமோ பேசுகிறது
என்னமாய் பேசுகிறது
என்கிறாள் தாய் !

குழந்தைகளின் குறும்புகள் ரசித்து மகிழலாம் .ஆர்வத்தோடு கவனிக்க வேண்டியது முக்கியம் .

குறும்புகளே
அழகாய் இருக்கிறது
அரும்புகளிடம் !

எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடித்துள்ளார் .படித்ததும் சிரிப்பு வந்து விடும் .

தேர்வில் முட்டை
குழந்தை சொன்னது அப்பாவிடம்
ஆசிரியைக்கு ஒன்னும் தெரியல்ல !

இன்று தனிக் குடும்ப வாழ்கையே எங்கும் பெருகி விட்டது .வீட்டில் ஆலோசனை வழங்கிட, குழந்தைகளுக்கு கதை சொல்லிட தாத்தா ,பாட்டி இருப்பதில்லை . அதனை உணர்த்திடும் ஹைக்கூ .

உறங்கிட
குழந்தை தயார்
கதை சொல்ல யார் !

இந்து பள்ளிகளே சிறைக் கூடங்களாக மாறி விட்டன .பிடிக்காத மொழியில் பாடங்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்கும் அவலம் .கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்னது போல புத்தகங்கள் குழந்தைகளை கிழித்து விடுகின்றன .அதனால்தான் குழந்தைகள் விடுமுறை நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .

கோடையும் குளிர்ந்தது
குழந்தைகளுக்கு
கோடை விடுமுறை !

நிகரில்லா உறவான நிகரில்லா உறவான அன்னையின் மேன்மையை அழகாக உணர்த்தும் ஹைக்கூ .

உயிரை
பணயம் வைத்து
உயிர் தந்தவள் தாய் !

நம் நாட்டில் கூலி வேலை பார்த்தாவது தன் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவூட்டும் ஹைக்கூ இதோ !

பிள்ளை புத்தகம் சுமக்க
செங்கல் சுமக்கிறாள்
தாய் !

தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் கேட்கும் அவலம் தமிழகத்தில் உள்ளது .

மழலைகள் விரும்புவதில்லை ஆங்கில மொழியை ,ஆனால் பெற்றோர்கள் திட்டமிட்டு பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கின்றனர் .அம்மா அப்பா என்ற அழகு மிக்க தமிழ்ச் சொற்கள் இருக்க மம்மி டாடி என்று அழைக்க வற்புறுத்துகின்றனர் .ஆங்கிலேயர் யாராவது தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய் மொழி தவிர்த்து பிற மொழியில் அழைக்க சொல்வார்களா ? சிந்திக்க வேண்டும் .அதனை உணர்த்தும் ஹைக்கூ.

ஆங்கிலப் பள்ளி வாசலில்
அம்மா என்றது
விழுந்த குழந்தை !

வாழ்வியல் தத்துவம் உணர்த்தும் ஹைக்கூ .

குழந்தை இருந்தால் மகிழ்ச்சி
குழந்தையாய் இருந்தால்
என்றுமே மகிழ்ச்சி !

நகரத்து குழந்தைகளுக்கு நெல் விளையும் நிலம் பற்றி எதுவுமே தெரியாது வளர்க்கின்றனர்

தெரிகின்றது கணினி
தெரியவில்லை கழனி
தற்கால குழந்தைகள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .தொய்வின்றி எழுதுங்கள் .


--

எழுதியவர் : இரா .இரவி (22-Sep-12, 4:29 pm)
பார்வை : 450

மேலே