பள்ளித் தோழி

பேரங்காடியில்
ஓரங்க நாடகம்
நடத்திப் பார்த்தேன்
அவளிடம் கேட்டு விடலாமா
கேட்காமலே விட்டு விடலாமா

நான் நினைக்கும் பெண்ணா-இல்லை
இவள் வேறொரு பெண்ணா?
ஐயம் ஆட்கொண்டாலும்-மனமோ
அவள் நினைவில்
மையல் கொண்டது

அவள்
அழகை ஆயுள் கொஞ்சம்
அள்ளித் திண்றிருக்க
புன்னகையை குடும்பச் சுமைகள்
கொஞ்சம் கொன்றிருக்க
துறுதுறு பேச்சும்
துடிப்பான செய்கையும் கூட
கொஞ்சம் காணாமல் போயிருந்தது

நான் கொண்ட நட்பும்
அவள் கொண்ட பாசமும்
மாறாமல் இருக்குமா?
என் பெயரும் முகமும்
நினைவில் நிற்குமா?

எண்ணம் வந்து
எதோதோ சொன்னாலும்
திண்ணம் கொண்டே
கேட்டும் விட்டேன்

நி..நி..நீ..நீ.நீ.. நீங்க.....
அவள் பெயரைச் சொல்லி
கேட்ட போது
ஆச்சர்ய குறிகள்
அவள் முகமெங்கும்

அடுத்த நொடி
என் பெயரைச் சொல்லி
நலம் கேட்க
நானோ
அவள் நியபக சக்தியை
மெச்சுவேனா?-இல்லை
என் நட்பை மெச்சுவேனா?

எட்டு வருடங்கள்
சிட்டாய் பறந்து சென்றாலும்
மறவா நட்பில் மிகிழ்ந்தேன்

புத்தக இரவல்
உணவுப் பரிமாற்றம்
பள்ளிக் குறும்புகள்
சின்னச் சின்ன சண்டைகள்
இறுதித் தேர்வின் இறுதியில்
நண்பர்கள் கூட்டமாய்
சென்று பார்த்த சினிமா
எல்லாமும்
கொஞ்ச நேரத்தில்
கதை பேசி கலந்துரையாட
மீண்டும் சந்திப்பதை
உறுதி செய்யாமல்
விடை பெற்றாள்

நான்
அங்கிருந்தே
என் பள்ளிக்கு மீண்டும் போனேன்
நினனைவுகளால்..........

எழுதியவர் : அலிந்கர். அகமது அலி (25-Sep-12, 8:51 am)
பார்வை : 523

மேலே