அன்புடையீர் அல்லது மதிப்பிற்குரிய நண்பர்

நம் ’எழுத்து’ தளத்தில் கவிதை, கட்டுரைகள் எழுதும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். பல வயதினர்கள். தமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்தும், இந்தியாவின் பல மாகாணங்களிலிருந்தும், இலங்கை, லண்டன் மற்றும் கத்தார், துபாய், மெடகாமா போன்ற நாடுகளிலிருந்தும் எழுதி வருபவர்கள். எழுதக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் நல்லமுறையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகப் பாராட்டினாலும், சில நேரங்களில் எழுத்துப் பிழைகளை தனிவிடுகையில் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அப்பொழுது அவர்களின் அறிமுகப் பக்கத்தில் யார், என்ன வயதினர், பெண்ணா, ஆணா என்ற விபரங்களைத் தெரிந்து கொண்டுதான், அவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணியபடிதான் நான் எழுதுவது வழக்கம்.

அப்படியிருக்கையில் பதில் அனுப்புபவர்கள் நம் விபரங்களை, நாம் யார், நம் வயது, தகுதி, அனுபவம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டுதான் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. ஓரளவு வயது முதிர்ந்தவர்கள், நடுத்தர வயதினர் என்னைப் போல விபரம் அறிந்துதான் அணுகுகிறார்கள். ஆனால், இளம்வயதினர், மிக இளம்வயதினர் அணுகுமுறைதான் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் புதிதாக ‘எழுத்து’ தளத்தில் அறிமுகமானவர்களுக்கு ஏதாவது தனிவிடுகையில் கூற விரும்பினால், அவர்கள் பற்றிய அறிமுகப் பக்கத்தில் அவர்கள் பற்றிய விபரம் அறிந்தபின் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று யோசித்து, அவர்கள் பெயரை விளித்தோ, நண்பர்க்கு என்றோ எழுத ஆரம்பிப்பேன்.

ஆனால் சிலர் எனக்கு தனிவிடுகை எழுதும்போது அய்யா என்றும், டாக்டர் என்றும், தோழர் என்றும் எழுதுகிறார்கள். பலர் அய்யா என்று எழுதினாலும், அய்யா என்று அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. டாக்டர் என்றும், நண்பர் என்றும் எழுதினாலும் மிகச் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

சிலர் என்னைத் ‘தோழர்’ என்று விளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தோழர் என்றவுடன் கம்யூனிஸ்ட் என்ற எண்ணமும், சம வயதுடையவர் என்ற எண்ணமும்தான் என் மனதில் ஏற்படுகிறது. எனவே நெருங்கிய நண்பரல்லாத ஒருவர்க்கும், தன்னைவிட வயதில் மூத்தவர் ஒருவர்க்கும் எழுதும்போது, அன்புடையீர் என்றும், மதிப்பிற்குரிய நண்பர் என்றும் குறிப்பிடலாம் என்பதும் என் தாழ்மையான கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-12, 7:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 469

சிறந்த கட்டுரைகள்

மேலே