ஒரு கைது… பல கேள்விகள்

ஒரு கைது… பல கேள்விகள்
பெரிய கொசு ஒன்று கடித்ததால் வலியில் துடித்து தூக்கத்தில் இருந்து எழுத்து கொண்டேன். சிதைந்து போன கொசுவிலிருந்த இரத்தம் எனது உடலில் திட்டு போல் ஒட்டிக் கொண்டிருந்தது. பக்கத்தில் தோழர் சதீஷ் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர் எப்படி என் பக்கத்தில் இருக்கிறார் என்று யோசித்தேன். இன்று மாலையில் தானே சிறையில் அவரை சந்தித்து உரையாடினேன். அதற்குள்,,,,,,,,, ஐய்யோ…. நான் தான் சிறைக்குள் இருக்கிறேன்…. பயம் என்னை தொற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். லோசன மங்கலான வெளிச்சத்தை கண்கள் பழகி கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது.
அடுத்த விநாடி அதிர்ச்சியில் உறைந்து போனேன். முகநூலில் என்னுடன் தொடர்புடைய நண்பர்கள் அனைவரும் அந்த சிறையின் பரந்த அட்மிசன் பிளாக்கில் அடைப்பட்டு இருந்தனர். சிலர் தூங்கி கொண்டிருந்தனர். பலர் குழு குழுவாக காரசாரமாக விவாதத்தில், இன்னும் பலர் சத்தமாய் பேசிக் கொண்டிருந்தனர். பரபரப்புடன் அந்த நள்ளிரவில் லெப்டாப்பில் குறுஞ்செய்திகளையும், முகநூலில் ஸ்டேஸ்களை அப்டேட் செய்து கொண்டும் கருத்துகளை பதிவிட்டுக் கொண்டும் சிலர் இருந்தனர். தோழர்கள் மட்டுமல்ல தோழிகளும் சிறையில் அடைப்பட்ட இக்கூட்டத்தில் இருந்தனர்.
வியப்பில் கண்களை விரிய இன்னும் அகல திறந்து பார்த்தேன். கடல் கடந்த கனடா இலண்டன், ,பிரான்ஸ், சுவிஸ், அரேபியா….. நாடுகளில் இருக்கும் முகநூல் நண்பர்களும் அங்கிருந்தனர். எப்படி இவர்கள் சிறைக்குள் வந்தார்கள் என்று சிந்தனை செய்து கொண்டு இருந்தேன். என் முதுகு பக்கத்தில் யாரோ தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. திரும்பி பார்த்தேன். முகநூலில் நண்பராக இருந்த ஒரு “கார்டூன்” அங்கே நின்று கொண்டு பெந்த பெந்த முழித்து கொண்டிருந்தது. ஆச்சரியத்திலும். பயத்திலும் அலறினேன்.
நான் போட்ட அலறலில் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த எனது மகன் விழிந்து எழுந்து கொண்டான்.
“என்னாச்சுப்பா …… ஏங் கத்திரங்க..” என்று தூக்கம் கலக்கத்துடன் கேட்டான்.
அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது நான் கனவு கண்டு கனவில் பயந்து அலறி உள்ளேன். பதில் கிடைப்பதற்குள் அவன் மீண்டும் உடனே தூங்கி விட்டான். புண்ணிய ஆத்மா….! எனக்கு அதற்கு பிறகு தூக்கம் வரவில்லை. ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் வேகமாய் மாறி மாறி அறிவை, மனதை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. வெட்ட வெளியில் அமைந்த வீடாக இருந்தால், கரும் இரவின் தனிமை ஆழமாய் என்னுள் ஊறிச் சென்று கொண்டிருந்தது. பளீரெனற மின்னல்கள் சன்னல் கண்ணாடிகளை தாண்டி ஊடுருவியதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்த “கனவு காணும் வியாதி” நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை என்பது எனக்கு தெரியும். மனநல மருத்துவர் கூறியபடி “எட்டிலான்” (ETIZOLAM) மாத்திரை பாதிஅளவுதான் போட வேண்டும். அதையும் மீறி முழுமாத்திரையை படுக்கைக்கு போகும் முன்பு போட்டு கொண்டேன். மூளை சிந்தனை செய்யும் போக்கு இத்தனை ஆன்டுகளில் பழ்கி போய் இருந்தது.
“ஏன் இப்படி காவல்துறையினர் நடந்த கொள்கிறார்கள்..?” என்று அந்த பொதுசன பிரதிநிதி (COMMAN MAN) கேட்ட ஒரு கேள்வி…. ஓராயிரம் தடவைகள் திரும்ப திரும்ப மூளையை பிராண்ட தொடங்கி விட்டது எனக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது. பகுத்தறிவு வேறு திசையிலும், உணர்வுகள்-உணர்ச்சிகள் வேறு திசையிலும் என்னுள் பயணம் செய்வதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை! இப்பொழுதிருக்கும் நிலையில் அது சாத்தியமும் கிடையாது
அனைவருக்கும் இயல்பாக இருக்கும், எழும் கேள்விகள் தான் அவைகள்! ஆனால், அதுவே நாடி, நரம்பு, உணர்வுகள், உணர்வு முழுவதையும் விழுங்கி ஆக்கிரமிக்கும் பொழுது அறிவு தோற்று போய் விடுகிறது
மேலே கண்ட கனவு மிகவும் சாதராணமானது தான்… நந்திக் கடலில் கைகால்கள் சிதறி உடல் சிதைந்து இரத்தக் கோளமாய் குற்றுயிராய் அலறி அரற்றி முணகி பிணங்குவியல்களுக்கு மத்தியில் துடித்து துடித்து எனது உயிர் மெல்ல அடங்கி கடைசியாய் இறுதி மூச்சு பெரும் துடிதுடித்தது கண்டு விழித்து கொண்டு பயத்தில் உடல் குப்பென வியர்த்து, தசைகள் பதறித் துடித்த அந்த கனவிற்கு பிறகு தூக்கம் வராமல் தவித்து விடிந்த நாட்கள் பல… எதை எழுதுவது…எதை விடுவது…
தண்டகாருண்யா காட்டில் கோப்ரா அரசு படைகள் துரத்த பல தோழர்கள் குண்டடிப்பட்டு இறந்துப் போக மூச்சிரைக்க நான் ஒடி ஒடி மரங்களுக்கும், புதர்களுக்கும் இடையில் பல மையில்கள் ஒடித் தப்பித்து சிக்கி சின்னாபின்னமாகி புழுவாய் மண்ணில் துடித்தாக கனவு கண்டு எழுத்தது எல்லா பிரச்சனைகளையும் என் பிரச்சனைகளாய் தோற்ற மயக்கம்… அதற்கான எத்தனை கனவுகள்.
உலகின் எந்த மூலையில் போராட்டங்கள் நடந்தாலும் அதனுள் நான் இருப்பதாக கற்பனைகள்… அவைகளே கனவுகளாய்.. தூக்கம் வராமல் சிதைந்த இரவுகள் பல நாள்கள் தொடர்ந்திருக்கின்றன. அந்த கனவுகளை எழுதி வைக்க வேண்டும் என நினைத்து விடியலில் மறந்து போன நாட்கள் அதிகம்….. படுக்கையில் படுத்தாலே பயங்கர கனவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தூக்கமிழந்த நாள்கள்… மாதங்கள்… ஆண்டுகள் பல
. இது பழைய கதை…இப்பொழுது அப்படி கனவுகள் வருவதில்லை! கூடங்குளம் அணுஉலையை எதிர்த்த மக்களை கடலில் துரத்தி காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்ததும் மீண்டும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது.
தூக்கம் வராமல் இணையத்தை மீண்டும் தட்டிய பொழுது சதிஷ் கைதானதை முகநூல் நண்பர்கள் முகநூலில் பதியவிட்டு கொண்டிருந்தனர் அவரை ஏன் கைது செய்கிறார்கள் என்ற சிந்தனையில் நள்ளிரவு கடந்து விட்டது.. எட்டிலான் மாத்திரையை முழுவதாக விழுங்கிய பின்புதான் அரைகுறையாக தூக்கம் வந்தது.
வழக்கறிஞராக பதிவு செய்த சென்ற ஆண்டில் ஒரிரு முறை புழல் சிறைக்கு சிறைவாசிகளை நேர்காணலுக்கு சென்று இருக்கிறேன்.
அன்று சதீஷ்சுடன் சாத்தூர் ஒன்றிய திமுக கட்சி செயலாளரும் கைதாகி சிறையில் இருந்தார். நடந்தது என்ன என்ற உண்மை கதையை கேட்கும் ஆவலில் இருந்த எனக்கு அவர் சொன்ன இரண்டு விசயங்கள் அல்லது அந்த கேள்விகள் மனதை அரிக்கத் தொடங்கின.
“..எம்.எல் காரனுக்கும், நிலப்பிரச்சனையில் கைதான திமுக கட்சிகாரனுக்கு என்ன உறவு என்று கியூ உளவு போலிஸ்காரர்கள் கேட்கிறார்கள்…. பல கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் உளவுதுறையினரை, போலிஸ்காரர்களைப் பார்க்கின்றோம் …. விரும்புகிறாமோ இல்லையோ.. கடமைக்காக வேணும் ஒரு சிரிப்பை போலியாக வேணும் உதிர்த்து விட்டு தானே செல்கிறோம் என்று நான் சொன்னேன்…” என்றார் சதீஷ்.
“…கூடங்குளம் பிரச்சனைக்காக கைதாகி திருச்சி சிறையில் இருக்கையில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியிடன் இவரும் கைதாகி இருந்தார், எங்களுக்குள் சதாரண மனித உறவு தாண்டி ஏதுமில்லை. இயல்பான மனித நாகரிகம்(HUMAN COURTESY) கருதி ஒரிரு நிமிடங்கள் சந்திப்பிற்கு பிறகு… அண்ணா நூல் நிலையத்தில் இருந்து கிளம்பிய அவரவர் வீட்ட்டிற்கு கிளம்பிய எங்களை மடக்கி விசாரணை என்ற கூப்பிட்டு சென்று கியூ உளவு போலிஸ்காரர்கள் வழக்கு போட்டு விட்டனர் ..” என்றும் சங்கடத்துடன் கூறினார்.
மேலும், “… கூடங்குளம் போராட்டங்கள் தீவிரமாக நடக்கும் பொழுது ஏன் நீ அதில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருக்கிறாய் என்று கேட்கின்றார்கள்..” என்றார்.
அதை கேட்ட எனக்கு,… ஒரு கணம் காவல் துறையினர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. திமுக பிரமுகர் சிறை அதிகாரிகளிடம் உள்ள தனது வீட்டுசாவிக் கொத்தை தனது உறவினரிடம் சேர்ப்பிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்
வீட்டிற்கு போகும் வழியில் அந்த சாவியை திமுக பிரமுகர் உறவினரிடம் சந்திந்து ஒப்படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. என்னை அவர் எளிதில் அடையாளம் கண்டு கொண்டார். அவர் என்னை பார்த்து கேட்ட கேள்வி
“என்ன சார் இங்கு நடக்குது,,,,,,???”
எனக்கு என்ன பதில் சொல்வது என்று அந்த வினாடியில் விளங்கவில்லை…….. இப்பொழுதும் கூட அந்த கேள்விக்கான எளிமையான பதில் என்னிடம் இல்லை!
“சதீஷ்மும் திமுக பிரமுகரும் இந்திராநகர் சாலையில் நின்று கொண்டு கற்களை நடந்து போகும் பொது மக்கள் மீது வீசி எறிந்து எங்களை கவனிக்கமாட்டீர்களா…… என்று கத்தினார்கள்..” என்பது தான் வழக்கு… இதற்காக பொதுமக்கள் தங்கள் கடமை ஆற்றாமல் தடுக்கும் தடை சட்டம் பிரிவு 75 யில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்று போகிறது….
“இதற்கு என்னதான் முடிவு சார்….? எப்படி அந்த நீதிபதி இவர்கனை சிறையில் அடைக்க உத்தரவு இட்டார்….?.”
அவர் உறவினர் ஒரிரு கேள்விகளை தான் கேட்டார் . அவர் மௌவுனமும், கண்களும் ஆயிரம் கேள்விகளை என்னிடம் வீசி எறிந்து கொண்டு இருந்தன. அதற்குள் அவருக்க தொலைப்பேசி வந்தது. அந்த உரையாடலின் மூலம் அவர் மனநல மருத்துவர் என்று புரிந்து கொண்டேன்.
சிவில் சமூகத்தின் பிரதிநிதியாய் அவர் எழுப்பிய கேள்விகளை சட்டத்தின் பிரதிநிதியாய் இருந்து நான் பதில் சொல்வதா அல்லது சமூக மாற்றத்தை நேசிக்கும் அமைப்பின் பிரதிநிதியாய் இருந்து பதில் சொல்வதா என்று குழப்பத்தில் இருந்து விடுபட முடியவில்லை.
இந்த சமூகத்தின் அங்கமாய் உள்ள நாம், நாள்தோறும் நூற்றுகணக்கில் பல மனிதர்களை சந்திக்கின்றோம். இந்த உறவுகள் வேவ்வேறு சமயங்களில் வேவ்வேறாக உள்ளன. உளவு துறை… இதற்கெல்லாம் அர்த்தம் கற்பித்தால் அவர்களின் மீது வழக்குப் போட்டால் ஒவ்வொருவர் மீதும் ஒரு இலட்சம் வழக்குகள் போடலாம்.. இப்படியே போனால் இந்த என்னவாகும். பதில் தெரியாத கேள்விகளா இவை?
ஒரு வார்த்தையில் போலிஸ் ராஜ்ஜியம் என்று கூறி விடலாம். இந்த வார்த்தையை வேறு ஒரு சமயத்தில் கூறினால் அவருக்கு ஒருவேளை புரியாமல் போய் இருக்ககூடும். இப்பொழுது நான் ஏதும் அவருக்கு பதில் கூறவில்லை. ஆனாலும் அவருக்கு தான் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்து இருக்க வேண்டும்… நமது காவல்துறையினர் தனது அத்துமீறல்கள் மூலமாக அவர்களே மக்களுக்கு புரிய வைத்து விடுவார்கள் போல உள்ளது.
தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மீது பல ஆண்டுகள் முன்பு புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தெருவில் கற்கலை வீசி காலட்டா செய்தாக காவல் துறை வழக்கு ஒன்று புனைந்தது என் நினைவிற்கு வந்து தொலைந்து தொந்தரவு செய்தது.
சில நிமிடங்களில் நாங்கள் பிரித்தோம். நான் எனது ஸ்கூட்டரின் சாவியை திருகி ஒட்ட முனைந்தேன். அது மக்கர் செய்தது. ஸ்கூட்டரின் பளு தாங்கமுடியாமல் சிறிய தள்ளாடினேன். ஸ்கூட்டரின் மீது சாய்ந்து இருந்ததால் எனது கால் ஊனத்தை அந்த உறவினர் கவனிக்கவில்லை. இப்பொழுது அதை கவனித்த அவர் “நான் உதவி செய்யவா?” என்று கேட்டார்.
அதற்குள் வண்டி ஒடத்தொடங்கியது. சோகமான புன்னகையுடன் நாங்கள் விடைபெற்றோம்.
வண்டி ஒடிக் கொண்டிருந்தது. தற்செயலாய் பிரேக் போடும் பொழுது எனது காலை பார்த்தேன். அப்பொழுது அதுவும் ஒரு கதை சொன்னது:
“1988 ஆம் ஆண்டு எல்லா தினசரிகளிடம் பரபரப்பாய் வெளிவந்த கதை…. பிராட்வே பேருந்து நிலையத்தில் ஏ,கே. துப்பாக்கியுடன் ஒடிய நொண்டிகாலனை போலிஸ்கார்கள் விரட்டி பிடித்து சாகசம்…”.
மறுநாள் வழக்கறிஞ்சராக சதீஷீன் ஜாமீன் ஆணையை சிறையில் அளித்து விட்டு வாசலில் காத்திருந்தோம்.. நிறைய பேர் காத்திருந்தனர். வெளியே வந்த சதீஷ், அந்த திமுக பிரமுகரும் அவரவர் வீட்டிற்கு விடைப்பெற்றுச் சென்றனர். போகும் பொழுது சதீஷ் கவலையுடன் கூறினார்.
“நாங்கள் இருவரும் 15 நாட்கள் தினமும் காலையில் திருவான்யூர் காவல்நிலையத்தில் கையெழுத்துப்போட வேண்டும் என்பது நிபந்தனை .
ஒரிரு நிமிடங்கள் HUMAN COURTESYக்காக கூடி கலைய நினைத்த இவர்களை 15 நாட்களுக்கு சேர்ந்து வைத்தது யார்…?
உளவு காவல்துறையா…..? நீதிதுறையா…..? விதியா..?
பல கேள்விகளுக்கு பொருள் விளங்கிளாலும் குழப்பம் நீடிக்கவே செய்கிறது

எழுதியவர் : கி.நடராசன் (28-Sep-12, 6:56 pm)
சேர்த்தது : நடராசன்.கி
பார்வை : 109

மேலே