##### ஒற்றைவழிப் பாதையிலே #####
ஆள் அரவமற்ற
ஒற்றை வழிப் பாதை
ஓர் இரவு அதனோடு
ஊர்தேடிப் பயணிக்க
தனியாய் வருகிறாய்
தடுமாற்றம் கொண்டே
தவறிது என்றே முறைத்துப்
பார்க்கும் மரங்கள்
சின்னதொரு சத்தமென்றாலும்
சிதறிவிடும் மனம் என்றே
சிறிதும் ஓசையின்றி சிலிர்ப்பற்று
உறங்கும் பறவைகள்
பேதையிவள் அச்சம் கண்டு
தென்றலும் மெதுவாய் நடைபோட
தொடர்ந்துவரும் நிழலும்
மறைந்திருந்து உளவு பார்க்க
வேகமும் விரைந்து
விவேகமாய் செயல்பட
பாதையும் தன் கடமைக்கு
பரிவாய் சுருங்கிவிட
பயணமது கடந்ததும்
எப்படி என் தைரியம்
என்று திரும்பி பார்த்து
சிரித்துக் கொண்டேன்