ஒரு தாயின் புலம்பல்

ஒரு தாயின் புலம்பல்
[இன்னிசை கலிவெண்பா]
வந்தாரை நம்நாட்டில் வாழவைப்போம், நம்முயிரைத்
தந்தோரை வீட்டைவிட்டே தள்ளிவிடும் வன்கொடுமை
நொந்தாரே பெற்றோர்கள் நோயொடுமூ தோரில்லில்
சிந்தாமல் ஒர்துளிநீர் சிற்றறிவால் பிள்ளைகளும்

இங்கிவரைப் பெற்றெடுத்து இன்னலுடன் தான்வளர்த்து
மங்கியதோர் கண்களுடன் மண்ணுடனே போராடி*
பொங்கிவரும் பொங்கலிட்டுப் போற்றியவர் இப்பொழுதோ
தங்குகிறார் யாருமின்றித் தான்முதியோர் இல்லமதில்
பொல்லாத இந்நிலையில் புண்ணான தாய்சொல்வாள்:

“கல்யாணம் செய்துவைத்தோம் கட்டழகைப் கைபிடித்தான்
இல்லாது சொல்லிஎம்மை இங்கிருக்க வைத்துவிட்டாள்
கல்லாதார் நாங்கள்தான் கற்கின்றோம் காலம்போய்
நல்லவனே முன்பொருகால் நன்றியினைத் தான்மறந்தான்”

“தாய்போதும் என்கின்றான் தந்தையரோ வேண்டாமாம்
நாய்எனவே ஓடிவந்தே நானிருப்பேன் தாதியைப்போல்
நோய்பெருத்த தந்தையர்க்கோ நோக்கிடமூ தோரில்லம்
பேய்க்குணமே உள்ளவனாய்ப் பெற்றேன்பார் என்மகனை”

“என்னிடத்தைச் சுற்றிவந்தே என்பேத்தி ஆடுகின்றாள்!
தன்னிடத்தைத் தாவிவந்தே தட்டிவிழும் என்பேரன்!
சொன்னதையே என்மகனும் சொன்னபடிச் செய்கின்றான்!
என்கனவில்....எப்போதும்.....எல்லோரும் என்னிடமே!!!”

“வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய்
ஊரதனில் உள்ளவர்கள் உன்னைநகை யாடிடுவார்
பாரிதைநீ இவ்விடத்துன் பையனுனைச் சேர்க்கவந்தே
பேரேட்டில் பேர்பதிப்பான் போ”

* மண்ணுடனே போராடி = விவசாயம் செய்தல் எனக்கொள்க
--- Dr. சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.

எழுதியவர் : Dr. சுந்தரராஜ் தயாளன், பெங்க (30-Sep-12, 6:22 pm)
பார்வை : 144

மேலே