சத்திய சோதனை

---- சத்திய சோதனை ----

தேசிய ஒருமைப்பாடு தினம்
கொண்டாடி முடிந்தாயிற்று.

தெரு குழாய் தொடங்கி
கர்நாடகம், கேரளா வரை
தண்ணீருக்கு தகராறு...

அசாமுக்கு அந்தபக்கமிருக்கும்
எல்லை தாண்டி
எப்போது வேண்டுமானாலும்
இந்தியாவில் விழலாம்
சீன-சிங்கள கூட்டு
அணு ஆயுத குண்டுகள்.

தடியடி நிகழ்த்தும்
காவல் துறை மீது
கல்லெறிந்து விரட்டுகிறார்கள்
அறவழி போராட்டகாரர்கள்.

அறவழி போராட்டமென்று
அறிவித்த அத்தனையும்
கடைசியில்
கலவரமாக முடிந்துவிடுகிறது...

ஆயுத கிடங்கு வைத்திருப்பவர்கள்
வன்முறை வேண்டாமென
அறிக்கை விடுகிறார்கள்.
சம்மட்டி பிரயோகிப்பவர்கள்
சத்தியாகிரகம் நடத்துகிறார்கள்.

உழைக்கும் வர்க்கத்தை
உறிஞ்சு குடித்து
ஏழு தலைமுறைக்கு
சொத்து குவித்து
தேர்தல் களத்தில்
தெரிவித்தார்கள்
"நான் ஏழையாக பிறந்தவன்"

சுவிஸ் வங்கியின் சிரிப்பொலி
செந்நீர் சிந்திய தேசத்தின்
செவிகளில் விழவில்லை.

எங்கும் பார்த்தாலும்
உண்ணாவிரதம்
எதற்கென்று
அவர்களுக்கே தெரியவில்லை.

இரண்டு மணி நேரத்தில்
வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது
இன்னும் சில
உண்ணாவிரதங்கள்

"நான் சொல்வதெல்லாம் உண்மை"
குற்றவாளி கூண்டில்
பொய் சாட்சி.....
காயலாங்கடை
கணித புத்தகமானது
புனித நூல்கள்...

நீதிபதிகள் பாவம்
வாய்தா வழங்குவதற்கென்றே
வருகிறார்கள்.

"எதிர் கட்சிக்காரர்
உண்மைக்கு புறம்பானதையே
பேசுகிறார்"
எதற்கெடுத்தாலும்
இதை சொல்லியே
மறுத்துவிடுகிறது
மத்திய அரசு.

எது உண்மை என்பது
எங்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.

"மார்கழி மாசம்
மாமிசம் தவிர்த்துவிடுங்கள் "
அறிவுறுத்தும் சாமிகள்
நல்லது நடக்க
நரபலி கேட்கிறார்கள்..

"இறைச்சி விற்று தீருமா"?
கவலையில்
கசாப்பு கடைக்காரன்.
கர்ப்பமாய்
இரு பலியாடுகள்

அகராதியில் தேடியபோதுதான்
அகப்பட்டது
மனிதநேயத்திற்க்கான அர்த்தம்.

மடம் நிறுவி
உலகெங்கும் கிளை பரப்பி
மறைவாய்
மஞ்சம் அமைத்து
மங்கைகளோடு மகிழ்ந்துகூடி
சட்டப்படி எல்லா பெண்களையும்
சகோதரிகாளாய் ஏற்பதே
இன்றைய பிரம்மச்சரியம்.

மதுக்கடை அடைப்பு
மகான்கள் பிறந்தநாள்
கள்ள சரக்கு
கிடைக்கும் நாள்.

கற்பழிப்பு செய்தி இல்லாமல்
விற்பனையாவதில்லை
நாளிதழ்கள்.

"என் குடுமி பிடித்தவனின்
குடும்பத்தை அழியுங்கள்"
தனியறையில் தலைவர்கள்

மேடையில் கூவினார்கள்
" ஹே ராம் "

ஐயோ
எதோ சொல்லவந்து விட்டு
ஏதேதோ எழுதுகிறேன்...

தோழர்களே !
பெரிதாய் ஒன்றுமில்லை
அறவழி
சத்தியம்
சைவம்
வாய்மை ஏற்ற
காந்தியடிகள் பிறந்தநாள்
இன்று
அவ்வளவுதான்...


---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (2-Oct-12, 1:30 pm)
பார்வை : 804

மேலே