முதல் முத்தம்

காதோரத்தில் என் மூச்சுக் காற்றை சுமந்தவாறே சாய்ந்தது அவள் தேகம்
மரத்தின் மீது.

பறவைகளின் சலசலப்பில் பட்டுத் தெறித்தது
சில பன்னீர்த் துளிகள் அவள் கன்னத்தில்.

அழிந்து போன ஓவியமாய்த் தெரிந்தது
அவள் விழியோரக் கண்மை.

சங்குக் கழுத்தைச் சுற்றிப் படையெடுத்தவாறே
சென்றன சில துளிகள் மத்தியப் பள்ளத்தில்
வீழ்வதற்க்காய்.

விரலிடையில் கரைந்தோடும் தண்ணீர் நிலவைப் போல் வழிந்தது மழைத்துளி அவள் நெற்றி வகிட்டில்.

அவளின் பட்டை தீட்டப்பட்ட மூங்கில் நகங்கள் என் காதோர முடிகளைய பேசாமல் பேசியதென் மௌனம் அவளின் பெண்மையிடம் எதையோ....

அழித்துக் கொண்டே வந்தது மழை அவளிடையில் நான் எழுதிய கவிதைகளை.

புடவை நுனியில் பிரியாவிடை பெற்றுத் தற்கொலைக்காய்த் தரையிறங்கின சில நீர்க்குமிழிப் பூக்கள்.

நெருக்கத்தின் வெட்கத்தில் அவிழ்ந்தன
சில மொட்டுக்கள் மரத்தின் கிளையில்

இலைகளினூடே விழுந்த மழைத் துளியோடு
சேர்ந்தே விழுந்தது அவள் சிந்திய முதல் முத்தம்
என் உதட்டின் மேலே.

நாணத்தில் சிவிந்த முகத்தை உதிர்ந்த இலையைக் கொண்டு மறைத்தவாறே சென்றது மரத்திலிருந்த எறும்பு.

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (18-Oct-12, 2:05 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 202

மேலே