(கல்யாணப்)பொண்ணு

கனவுகளுக்கு மாலை சூட்டி
இதயம் கனத்துப் போனாள்.
அந்த கல்யாணமாகா
கன்னிப் பெண்ணாள்.

சந்தோசப் பூக்களை
காகிதத்தில் பார்த்து பார்த்து
விட்ட பெருமூச்சில்
வீட்டு விட்டங்களும்
விரிசலாகிப் போய்விட்டது.

பருவம் வந்த நாள் முதல்
பார்ப்பவர் சொன்ன வார்த்தை
பகல் கனவாகிப் போச்சி .
``இவ அழகுக்கு எந்த மகாராசன்
பொட்டு வைக்க போறானோ ‘’
எல்லாமே பழங்கதை ஆகிப்போச்சி.

மூவெட்டு வருடமுடிந்து
மூவெட்டு மாதங்களுமாச்சி.
ஈரெட்டு வயசிலே கல்யாணமாகி
இவ வயசுப் பிள்ளைகள்
புள்ளையும் குட்டியுமாச்சி.
விசும்பல் வந்துவந்து போகும்.
வார்த்தைகள் நெஞ்சக்குழிக்குள் முட்டும்.

ராப்படுத்தா தூக்கமில்லை
ராவுக்கும் இரக்கமில்லை
யாராவது ஒருவனிடம்
பல்லிளித்தும் பழக்கமில்லை

பார்த்து விட்டுப்போன
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பலகாரம் செய்த காசில்
பவுனு அஞ்சாறு வாங்கியிருக்கலாம்- இப்ப
பவுனுக்கு பவுனுமில்லை
பார்த்து பேச பருவமும் இல்லை.

வாய் விட்டு அழுதிருக்கும்
வாயிருந்தா இவ வீட்டு வாசப்படி
தாய் வீட்டு ஜன்னல் கம்பி கூட
இவளுக்கு
தலை சாய்க்கும் தலைகாணியடி.

மன்னன் ஒருவன் வந்து
மங்கைஇவள் கொள்வாரோ
துள்ளல் வார்த்தை தந்து
துயர் கொல்வாரோ
வள்ளலாய் அவன் வரவேண்டும்
வஞ்சிதனை அள்ளவேண்டும்
எள்ளி நகைக்கும் ஊரார் பேச்சை
ஒடித்து கிள்ளவேண்டும்.

எழுதியவர் : சுசீந்திரன். (21-Oct-12, 2:56 pm)
பார்வை : 246

மேலே