துயிலைக் கொண்டாடுவோம்!.....
---------------------------------------------------------
உறக்கத்தை உதறுங்கள்; எப்போதும் விழிப்பிலேயே இருங்கள். விழிப்புதான்
நமது உயிர்ப்பான தருணம். அதை இழந்துவிடாதீர்கள்- என்கிற தொனியில் நிறைய
போதனைகள் புறப்படுகின்றன.
உறக்கம் உதறத்தக்கதன்று.
அது ஆரத்தழுவி அமிழ்ந்துபோவதற்கான அழகிய உலகம்.
உறக்கம் விழிப்பின் தாய். உறக்கத்திலிருந்தே விழிப்பு பிறக்கிறது.
உறக்கம் என்பது வீணையானால், அதிலிருந்து பிறக்கும் பூபாளம்தான் விழிப்பு.
விழிப்பும் துயிலும் ஒன்றில்லாது ஒன்றில்லை.
விழிப்பும் துயிலும் நாம் பெற்ற வரங்கள்.
உடல்கொண்டு இயங்கும் நமக்கு இவ்விரண்டையும் வரமாக வாரிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது ஈடற்ற இயற்கை.
விழிப்பு, நமது புற உலகை பலப்படுத்துகிறது.
துயில், நமது அக உலகை பலப்படுத்துகிறது.
விழிப்பில் இருக்கும் நாமும் துயிலில் இருக்கும் நாமும் நமது வேறுவேறான ஒருமை.
துயிலும் விழிப்பும் நமது இடது வலதுமாய் இருப்பவை.
துயில் ஒருவகையான மோனத்தவம்.
மனம் அந்த நிலையில்தான் சுமை தரிக்காது வெற்றை அணிகிறது.
புத்தி, தன் அசுரவேகத்தைக் குறைத்து நிதானித்து அமைதியடைகிறது.
கண்ட திக்கிலும் அலைந்து திரிந்து களைத்துப்போகும் நமது மூளைக்கு,
இயற்கை இரவுக் கிண்ன்ணத்தில் நிரப்பித்தரும் புத்துணர்வுக்கான பானமே துயில்.
உறக்கம் ஒரு உன்னத உலகம். நிசப்த வீதிகளால் ஆன உலகம்.
மெளன இசை கசியும் மந்திர உலகம் அது.
அன்றாடக் காயங்களுக்கு மருந்தும் ஒத்தடமும் இங்குதான் கிடைக்கும்.
இங்கு வேட்டைகளும் இல்லை விழுதல்களும் இல்லை.
ஆசைகளும் நிராசைகளும் தீண்டாத மாய உலகம் இது.
துயில்; நம் ஆயுளை நனைக்கும் ஆனந்த நதி.
பலரால் இதை முழுதாக நீந்திக்கடக்க முடிவதில்லை. தரை தட்டிவிடுகிறார்கள்.
பலர் இந்த உலகத்தை, அவசரக் காமம் போல் பரபரப்பாய்க் கடக்கிறார்கள்.
இதில் முழுதாய் ஆழ்ந்துபோக முடியாதவர்களுக்குத்தான், கனாச் சன்னல்கள் கண்டபடி திறக்கிறது..
இந்தக் கனவுகளின் வழியாய் வினோதத் தொந்தரவுகளும் ஆனந்த அவஸ்தைகளும் வந்து குத்திக் கிழித்துவிட்டுப் போகும்.
எதுவும் தேவைப்படாத மாய உலகத்துக்குள் நாம்தான் கனவுகளை அழைத்து வந்து
அல்லாடுகிறோம்.
துயிலை காதலால் அணுகி கிறக்கத்தோடு மோகித்து அதில் நாம் ஆனந்தமாய் மூழ்கவேண்டும்.
பிரஞ்ஞையற்றுப் போய் அதன் நிசப்த வீதிகளில் நாம் திரியவேண்டும்.
உடம்பின் அணுக்கோப்பைகள் முழுதையும் துயிலால் நிரப்பிக்கொண்டு தூங்கவேண்டும்.
நமது எல்லாத் திசைகளுக்கும் அங்கே நாம் திரைபோட்டுக்கொள்ளவேண்டும்.
சிந்தனைக் குதிரைகள் ஓடவோ, ஆசைவண்டுகள் ரீங்கரிக்கவோ நமது துயிலுக்கிடையில் நாம் அனுமதிக்கலாகாது.
நமது துயிலுக்குள் மிருதுவான இருளை மோனவிளக்குகள் கசியவிடுகின்றன.
துயிலின் போது நாம் நமது புற உலகை முழுதாய் வெளியே அனுப்பிவிடவேண்டும்.
நாம் நம்மை நமக்குள் அடைக்காக்கும் தாய்மடிக் கதகதப்பே துயில்.
வார்தைகளும் ஓசைகளும் இன்றி மெளனங்களோடு மெளனத்தால் நாம் பேசும் வசீகரப்பொழுதே துயில்ப்பொழுது.
துயிலை நேசிக்கவேண்டும். துயிலோடு தோழமை கொள்ளவேண்டும். துயிலோடு
துயிலாய் நாமே ஐக்கியமாகவேண்டும்.
இந்த முழுமைத் துயில்தான் ஏறத்தாழ சொர்க்கம்.
சரிவரத் துயிலாதவனின் விழிப்பு; அரைவிழிப்பாகும்.
அது நமது உலகை அரைகுறையாய் உருளவைக்கும்.
அன்றாடம் நமது புத்தியும் புலன்களும் துயிலின் கருவறையில் இருந்தே
புதிதாய் ஜனிக்கின்றன.
துயில் அன்றாடம் நம்மை புதிதாய் பிறப்பிக்கிறது.
நேற்றைய முடிவையும், கோபத்தையும், வெறுப்பையும், பகைமையையும், போட்டி
பொறாமையையும் இன்னபிறவற்றையும் துயில்தான் நம்மிலிருந்து நிதானமாய் நீக்குகிறது.
நாம் நமது நேற்றிலிருந்து நமது இன்றிற்கு இந்த துயிலின் வழியாகத்தான் வருகிறோம்.
நேற்றைய நம்மிடம் இருந்து, இன்றைய நம்மிடம் நம்மை, இந்தத் துயில்தான் கொண்டுவந்து கொடுக்கிறது.
நம்மை விழிக்க வைப்பது துயில். நம்மை புதிதாய்ப் பிறக்க வைப்பது துயில்.
நம்மை புத்துணர்வாய் இயங்க வைப்பது துயில்.
துயிலின் தாலாட்டு கேட்காவிடில், நமது விழிப்பு இமை திறப்பதில்லை.
துயில் பொழுதில் துயிலாதவன் விழிப்பில் விழிப்போடிருத்தல் அரிது.
யுகாந்திரங்களின் துயிலில் இருந்தே இந்த பூமி பிறந்திருக்கிறது.
காலங்களின் துயிலில் இருந்தே பிரபஞ்சமும் இந்த பூமியும் பிறகோள்களும் ஜனித்தன.
துயில் பிறப்பின் வாசல்; மரணத்தின் சன்னதி; வாழ்வின் அனுசரணை.
காலம் நமது நேற்றைகளை துயிலுக்கு அனுப்புகிறது. அதனால்தான் நாம் இன்றைகளை
விழிப்பில் அடைந்திருக்கிறோம்.
உடலுக்கு மட்டுமல்ல; புலன்களுக்கும் துயில் முக்கியம்.
காதலோ காமமோ எல்லா நேரத்திலும் அவை விழித்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை
சிதிலமாகிவிடும்.
துயிலிலேயே இருக்கும் அவை, தேவைக்கான தருணங்களில்
மட்டுமே விழிக்கவேண்டும்.
தண்ணீர் இருக்கும்போதெல்லாம் தாகம் விழித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.
தாகம் விழிக்கவேண்டிய நேரத்தில் விழித்தெழுந்தால் போதும்.
தேவை தருணங்கள் போக மற்ற நேரங்களில் பசி, துயிலிலேயே இருப்பதுதான் நல்லது.
சிந்தனையும் கூட எல்லா நேரத்திலும் விழித்திருந்தால் புத்திக்கு, புத்தி பேதலிப்பே உண்டாகும்.
வெய்யில் துயில் கொள்கிறது இரவில். இருள் துயில் கொள்கிறது பகலில்.
ஒளி துயில் கொள்கிறது இருளில்.
பத்துமாதக் கருவறைத் துயில்தான் நம்மை பூமிக்குக் கொண்டுவந்தது.
காதலிலும் காமத்திலும் அறிவு துயில்கொள்ள வேண்டும்.
நட்பிலும் உறவிலும் கோபம் துயில்கொள்ள வேண்டும்.
அறிவோர் மத்தியில் முனைப்பு துயில்கொள்ள வேண்டும்.
அந்திமக் காலத்தில் ஆசைகள் துயில் கொள்ள வேண்டும்.
துயில்; விலக்கிவைக்க முடியாத ஏடன் கனி.
உணர்ந்தோர்க்கு துயில் ருசிக்கும்.
எனவே துயிலை உணர்ந்து ருசிப்போம்.
துயிலை விழிப்போடு வழிபடுவோம்.
விழிப்பின் கருவறையாய்த் திகழும் துயிலை
துயிலிலும் ஆனந்தமாய்க் கொண்டாடுவோம்...
-ஆரூர் தமிழ்நாடன்
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
