கனடா தமிழ் சங்கத்தினருக்கு அன்பான வேண்டுகோள்..!
இளையராஜா இசை கச்சேரியை எதிர்ப்பதின் மூலம், என்ன சாதித்து விடப் போகிறீர்கள்..? நவம்பர் மாதம் என்றால் புலம் பெயர் மக்களுக்குத் தான் சொந்தம் என்ற ஒரு கருத்தே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள்..? அவர்களின் பின்புலம் என்ன..? அவர்களின் அரசியல் என்ன..? என்பதை விமர்சிக்காமல் ஒட்டு மொத்த நவம்பர் மாதத்தை குத்தகைக்கு எடுப்பதில் என்ன லாபம் ..? என்ன நட்டம்..?
நவம்பர் 26 மாவீரர்கள் தினம், இந்த கருப்பு தினத்தை அனைவரும் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர் இதுகாறும் ஈழத்து மக்கள் அனைவரும். ஈழ யுத்தத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் மக்கள் தெருவில் திரியவிடப் பட்டிருக்கிறார்கள்.ஐ.நா.வின் அறிக்கை தொடங்கி, இன்று ஈழ அரசியல் அமெரிக்க மற்றும் பிரிக் நாடுகளின் மிக முக்கிய கேந்திரமாக மாறிவிட்டன. அதை நோக்கி அரசியல் காய் நகர்த்துதல்கள் துவங்கி விட்டன.
தா.தே.கூ.வினருக்கு வழங்கப்பட்ட மரியாதை மற்றும் பேச்சு வார்த்தைகள் என்று ஒருபுறம் சூடு பிடிக்க, உலகத் தமிழர்கள், தமிழ் நாட்டு மக்கள் இலங்கையில் நடந்துள்ள கொடும் துயரங்களை தற்பொழுது தான் அறிந்து பெரும் ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர். போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என்று கூற துவங்கிவிட்டனர். இந்நிலையில், தமிழக மக்களால் பெரிதும் ஆதரவு பெற்ற, தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட கலைஞனுக்கு ஒரு இசை விழா நடத்துகிறார்கள் கனடா நாட்டில், அவரின் இசை நிகழ்ச்சிக்கு பின்புலமாக உள்ளவர்களை அம்பலப்படுத்தாமல், பங்கேற்பவரை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்...?
மேலும் நவம்பர் மாதத்தை சொந்தம் கொண்டாடும் போக்கினை மிக கடுமையாக எதிர்க்க வேண்டும். ஒருவேளை கனடா நாட்டின் தமிழ் சங்கத்தில் பல கருப்பு ஆடுகள் இருக்கலாம்..என்று தோன்றுகிறது. நவம்பர் மாதத்தையே கேவலப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் உளவியல் ரீதியாக புலிகளின் ஆதரவு சக்திகளை, சுதந்திர ஈழம் என்ற கருத்தாக்கத்தை சீர் குலைக்கும் முயற்சியே என்று அறிந்து கொள்ளலாம்.
நாளைடைவில், நவம்பர் மாத கொண்டாட்டங்கள் என்று புற்றீசல் போல கிளம்புவதற்கு இந்த எதிர்ப்பு பயன்படப் போகிறதோ..? என்று அச்சமாக உள்ளது. எனவே இது குறித்து புலம் பெயர் மக்கள் கவனம் கொள்ள வேண்டும். இவை குறித்த பிரச்சனையை எதிர் கொண்டு புலத்து மக்களுக்கு ஒரு புரிதலை அளிக்க வேண்டும், உலகத் தமிழர்களுக்கும் அளிக்க வேண்டும் ஈழ அறிஞர்கள், பெருமக்கள்...! என்று விரும்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.