அநாதை பெண்ணின் அவலம்

படிக்கும் வயதில் கற்றுகொண்டது
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல
என் பசியையும் தான்...

ஆம்!ஒருவேளை உணவுக்கு
இருவேளை பாத்திரம் கழுவி
ஒரு சாண் வயிற்றை
ஓரளவு நிரப்பினேன்...


எஜமானன் வீட்டில் எஞ்சியதை
சாப்பிட்டதால் என்னவோ அவன்
எஞ்சவிடவில்லை என் கற்பை
எஞ்சியது என்னவோ உயிர் மட்டும்தான்...


நகரத்திற்கு வாழத்தான் வந்தேன்
அப்போது தெரியவில்லை அது நரகமென்று
பணம் சம்பாதிக்க அவா இல்லை
மானத்தோடு வாழ போராடினேன்...

மானத்தை காக்க அலுவலகத்துக்கு
வேலைக்கு சென்றால் -அறையை
சுத்தம் செய்தால் போதாதென்று
மேலாளரை அனுசரிக்கவும் வேண்டுமாம்...


கைகோர்த்து காரில் செல்ல
தேவதையாய் மனைவி வேண்டுமாம்
கட்டிலில் கசக்கி எறிய
வேலைக்காரியாய் நாங்கள் வேண்டுமாம்...


தாயின் மடியில் தலைசாயிக்கவில்லை
தந்தை உழைப்பில் உணவருந்தியதில்லை
அக்காவின் அரவணைப்பை உணர்ந்ததில்லை
அண்ணனின் அதட்டலை கண்டதில்லை
தங்கையுடன் பாசத்தை பரிமாறிணதில்லை
தம்பியின் ஆசையை அறிந்ததில்லை
காதலனின் முத்தத்தை முகர்ந்ததில்லை...


காமக் கொடுரர்களின் நகக்கீறல்களும்
கயவர்களின் கட்டியணைப்பிற்கும்
கற்பை சூறையாடும் ஜென்மங்களுக்கும்
காட்சி பொருளாக என்னை படைத்த
இறைவா இப்போதே என்னை அழைத்துக்கொள்...

எழுதியவர் : சுபா பூமணி (2-Nov-12, 4:59 pm)
பார்வை : 253

மேலே