தீபாவளி நல்வாழ்த்துகள்

---- தீபாவளி நல்வாழ்த்துகள் -----


இழவு விழுந்த உறவுக்கு
உழவு செய்யும் தோழருக்கு
களவு போன வீட்டுக்கு

புத்தாடை அணிந்து
மத்தாப்பை கொளுத்துகிற
கித்தாப்பு மைந்தர்களை
வெறும் உடம்போடு
வேடிக்கை பார்க்கிற
எங்கள்
வெகுசன ஏழை சிறுவருக்கு

விடியாத இரவுகளில்
குடிகார கணவனிடம்
அடி உதை வாங்கி
உடைந்து நொறுங்கி
உலை வைக்கும்
அம்மாவுக்கு

வட்டிக்காரனிடம் தப்பி
எஞ்சிய மிகை ஊதியத்தில்
பலகாரம், பட்டாசு, புத்தாடை
வாங்கிவரும் அப்பாவுக்கு

ரேசன் அட்டை தொலைத்து
இலவச வேட்டி சேலையும்
இழந்தவருக்கு

விடுப்புக்கு அனுமதி கிடைக்காமல்
கடுப்பில் அமர்ந்து
அடுப்பெரியும் வீட்டை எண்ணி
அசைபோடும் பணியாளர்களுக்கு

வேர்த்து களைத்து
கைபேசி எடுத்து
வாழ்த்து செய்தி அனுப்பும்
வெளிநாட்டு இந்தியர்களுக்கு

நோயாளிகள் குணமடைதலே
நோக்கமென கொண்டு
மருத்துவ பணியில்
இருப்பவருக்கு

வீதியெல்லாம் வெடி வெடிப்பதால்
சாய்ந்து உறங்கும் சுதந்திரம்
சதா பறிபோகும்
சாலையோர சகமனிதருக்கு

அடுத்த பண்டிகைக்குள்
ஆண்டவன்
அழைத்து விடுவான்யென
உறவுகள் உதறிய கசப்பில்
நாட்கள் கடத்தும் முதியவருக்கு

கறி வாங்க நிற்கும்
அப்பாவின் விரல் இறுக்கி
ஆடு அறுப்பதை கண்டு
அழுதுவிடும் குழந்தைக்கு


ஐந்து அடுக்கு கட்டிட
ஆடை கடைக்கு கீழே
பாய் விரித்து
கைக்குட்டை விற்கும்
நண்பருக்கு

கடைவீதியில்
நடைபாதையில்
தொடைத் தேய நின்று
வியர்வை சிந்தும்
வியாபார காந்தங்களுக்கு

வெடிச் சத்தத்தால் மிரண்டு
வேறு தேசம் போயிருக்கும்
பறவைக்கு

மத்தாப்பு வாகன புகையால்
மலடாகிய
மரத்துக்கு

பொலிவிழந்த பூவுக்கு

நான் கொண்டாடுவது
நரகாசுரனின் அழிவல்ல
குடும்பத்தை ஒருங்கிணைத்து
ஒட்டுமொத்த மகிழ்ச்சியை நிரப்புகிற
ஒரு நாள்
இத்தீபாவளியென
புரிதல் கொண்ட
அனைவருக்கும்

சமூகமாற்றம் நிகழ்த்திவிட்டே
சாவதாக சத்தியம் செய்திருக்கும்
தாய்த்தமிழ் இளைஞர்கள்
சார்பாக
சக தீபாவளி நல்வாழ்த்துகள்..




தன்னபிக்கையுடன்
---- தமிழ்தாசன் ---

எழுதியவர் : தமிழ்தாசன் (12-Nov-12, 6:29 pm)
பார்வை : 645

மேலே