கள்ளமற்ற காதல் !

(கிராமத்தில் ஒரு வயல் காட்சி . அவனும் அவளும் மாறிமாறி பாடுகிறார்கள் )

வெயில் வெறுத்தே உலகைவிட்டு வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லே

முயல்பிடித்தேன் மூணுகாலு நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயங்க இத்தனை பொய் சொன்னவரே - உள்ளம்
எதைநினைத்து மயங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு காணுங் குரல் தளதளப்பு
வண்ணமென்ன நடைபழகும் சின்னவளே- உந்தன்
வயசுஎன்ன கண்ணழகு மின்னுதல்லோ

மண்ணை ஆழஉழுதுகொண்டு மாடுரண்டை விரட்டிவிட்டு
கண்ணை பொண்ணு மேல வைத்தால் கண்ணியமா - உள்ளே
காணு மனம் மரத்தில்தொங்கும் மந்தியுமா?

சலசலத்து ஓடும்நதி சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே -உன்
சிறுநடையில் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு கன்னிமனம் களவெடுத்து
நிலவில் எனைக் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லின்றுகாயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக் கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தா மனம்பிடித்தாய் வல்லவளே - எந்தன்
வானத்திலும் மழை இருக்கு சொன்னன்புள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் சின்னவரே - உங்க
நினைவி லென்ன படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளைபூட்டி சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சொல்லுதடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் கொள்ளுஇனி
நெல்முதிரும் கதிர் வளையும் நெஞ்சினிலே நினவுமுற்றி
நல்லவரே வளைந்துவிட்டேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே
புயல் அடிக்கும் மழையும்கொட்டும் புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

எழுதியவர் : கிரிகாசன் (18-Nov-12, 7:10 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 166

மேலே