நேற்று இராமலிங்க வள்ளலார் பிறந்த தினம்

சாதி மதத்தின் தீவிரம் ஓங்கியிருந்த காலம்
ஆங்கிலேயர் மண்ணில் ஊன்றியிருந்த காலம்
குலமும் கோத்திரமும் தாண்டவம் புரிந்த காலம்
மனித குலத்தின் தெய்வமகன் தோன்றிய காலம்

யார் அந்த மனிதர் என்று நீங்கள் கேட்கலாம்
அருட்பிரகாச வள்ளல்தான், நான் உரைப்பேன்
இராமலிங்கம் என்றே அவர் உலகில் தோன்றினார்
இராமலிங்க அடிகளாய் அவர் பின்னர் மாறினார்

கற்பித்த ஆசானுக்கே அவர் கல்வி போதித்தார்
வேண்டாம் என முடிவடையும் ஒளவையின் வரிகளை
நேர்மறையில் மாற்றினார் ‘வேண்டும்’ என்று பாடினார்
பக்தியில் மூழ்கினார் திருவருட்பா பொழிந்தார்

முருகக்கடவுள் காட்சிதனை கண்ணாடியிலே கண்டார்
சிவபெருமான் பார்வதியை துதித்து அவர் பாடினார்
நாற்பதைக் கடந்த பின்னர் ஞானோதயம் வரப்பெற்றார்
உருவவழிபாடுகளை தவிர்க்க என்று வேண்டினார்

மதம் ஜாதி சாராத ஆன்மிகம் அவர் மொழிந்தார்
சமரச சுத்தசன்மார்க சங்கம் அவர் நிறுவினார்
அன்புதான் மனிதனுடைய குறிக்கோள் என்றார்
கருணைதான் தெய்வம் என்றவர் சூளுரைத்தார்

கொல்லாமை நோன்பை அவர் வாழ்விலே கடைபிடித்தார்
ஜீவகாருண்ய தத்துவமே மனித வாழ்க்கையாகும் என்றார்
உருவமில்லா பரம்பொருளே ஜோதியான இறைவன்
கருணையின் ஸ்வரூபமே இறைவன் என வாதிட்டார்

கருணையை வார்த்தையளவில் நிறுத்தினார் இல்லை
அனைவர்க்கும் உணவு வழங்கும் திட்டம் அவர் தீட்டினார்
உள்ளவர்கள் இல்லாதார் என்று ஒரு பேதமின்றி
அனைவர்க்கும் உணவளிக்கும் ஏற்பாட்டினை செய்திட்டார்

நாட்டிலேயே முதன் முதலாய் அன்னதானக்கூடம்
உருவாக்கிய பெருமை வள்ளலாரையே சேரும்
அன்றுமுதல் இன்றுவரை அணையாத அடுப்பு ஒன்று
வடலூரில் இன்றுமே எரிந்துகொண்டுதான் இருக்கு

வடலூரில் வாழ்ந்துகொண்டு கருணையை பரப்பினார்
மனிதகுலம் ஒன்றென்ற கொள்கை நிறுவ முயற்சித்தார்
வள்ளலார் கொள்கைகளை ஏற்காத கட்சியினர்
இவர் உயர்வில் பொறாமையும் கோபமுமே கொண்டனர்

இலங்கை நாட்டு பக்தர் ஒருவர் இவர்மீது வழக்கிட்டார்
நீதிமன்ற வாயிலிலே வள்ளலார் நுழைந்தபோது
அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரைக்கண்டு வணங்கினர்
நீதிமன்ற தீர்ப்பும்கூட வள்ளலாரின் பக்கமே

இறுதிவரை சேவைசெய்த அருட்பிரகாச வள்ளலார்
மடமைகள் மறைந்திடவே மும்முரமாய் உழைத்திட்டார்
சிறிதளவில் வென்ற இவர் பெரிதளவில் தோல்வி கண்டார்
சமுதாயத்தில் பற்றற்று விரக்தியினைத் தழுவினார்

‘கடை விரித்தேன் கொள்வர் இலர்’ வள்ளலார் புலம்பினார்
ஒரு நாள் தன் அறைக்குள் சென்று உள்ளிருந்து தாழிட்டார்
‘சிறிது நாட்கள் என் அறையைத் திறந்திடாதீர்’ எச்சரித்தார்
அதன் பிறகு அவரை எங்கு தேடிடினும் காணவில்லை

பஞ்சேந்திரிய உடலை அவர் ஜோதியாக மாற்றினார்
இறைவனுடன் கலந்துவிட்டார் என்றே பலர் கருதினர்
வள்ளலாரின் வழிப்படியே முன்னோர்கள் வாழ்ந்திருப்பின்
இன்று நாட்டினிலே சமத்துவம் சமரசம் வாழ்ந்திருக்கும்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (6-Oct-24, 4:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 29

மேலே