முதியோர் இல்லம்- ஒரு தாயின் கதறல்.

மகிழ்ச்சிக்கு மறுபெயராய்
மகனே உன்னைப் பெற்றெடுத்தேன்.

அன்பாலும் அறிவாலும்
ஆசையோடு ஆளாக்கி

பண்போடு படிப்பையும்
படிப்படியாய் பகுத்தளித்தேன்.

பணம் காசு சம்பாதிக்க
பார்த்து அதை ரசித்திருந்தேன்.

மனதிற்குப் பிடித்தப் பெண்ணை
மருமகளாய் அழைத்துவந்தாய்,

மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டு
மகள் இல்லாக் குறைகலைந்தேன்.

அவள் பேற்றை அமர்களமாய்
ஆடம்பரமாய்க் கொண்டாடி,

முத்துக்கு முத்தான
உன் மழலைக்குச் சோறூட்டி,

சுகமாக உன்னோடு
சொர்க்கத்தை நான் கண்டேன்.

முதுமை என்னில் நுழைந்தவுடன்
முடியாமல் நான் படுக்க,

முதியோர் இல்ல முகவரியை
முனைப்பாக நீ தேட....

குழந்தையாய் நீ இருக்க
கொஞ்சி நான் மகிழ்ந்திருந்தேன்

குறை இல்லாக் குதூகலம்
குடும்பத்தில் நிறைந்திருக்க,

அன்பாலே நீராட்டி
ஆசையாலே சோறூட்டி

அரவணைப்பால் தாலாட்டி
அமைதியாய் உறங்கவைத்தேன்.

பால் குடிக்கும் அழகினைப்
பார்த்துப் பார்த்து இரசித்திருந்தேன்.

பல் இல்லா சிரிப்பிற்கு
பகரம் இல்லை என்றுரைத்தேன்.,

தப்புத்தப்பாய் நீ பேச
கை தட்டிதட்டி மகிழ்திருந்தேன்.

தத்தித்தத்தி நீ நடக்க
தடிக்கிடாமல் தரை கிடப்பேன்.

ஆயிரம் கேள்விகளை
அடுக்கடுக்காய்க் கேட்டாலும்

அறிவாளி என்றெண்ணி
அமைதியாய் பதிலுரைப்பேன்.

நீ அன்றிருந்த நிலைமையை
ஆசையாய் நான் பார்க்க

நான் இன்றிருக்கும் நிலைமையை
இம்சையாய் நீ பார்க்க

எங்குத்தள்ளப் போகிறாய் என்ற
எண்ணம் தலை தூக்க,

இறுக்கி கண்ணை மூடுகிறேன்.
இறந்துவிட வேண்டுகிறேன்.

அன்று அசுத்தங்கள் அத்தனையும்
என் மேலே செய்திடுவாய்.

அருவருப்பு ஏதுமின்றி
அன்பாலே கழிவிடுவேன்.

இன்று அசுத்தம் என்று எண்ணி
எனை அள்ளி எறியத் துணிந்துவிட்டாய்.

முதியோர் இல்ல சமாதிக்கு
மூட்டை கட்ட சொல்லிவிட்டாய்.

அவர் என்னை முந்தாமல்
நான் முந்த வரம் கேட்டேன்.

எதிர் காலம் முன் அறிந்தோ
என்னவரும் முன்மறைந்தார்!

அன்பான மகனுக்கு இன்று நான்
அறிவுரை தருகிறேன்.

முக்கியமாய்ப் பத்திரமாய்
முதியோர் இல்ல முகவரியை

உன் மகவிடத்தில் கொடுத்துவிடு!
மறக்காமல் முன் பதிவு செய்யச் சொல்லிவிடு!

ஆயிசு நீண்டிருந்தால்
அங்கு நாம் சந்திப்போம்.

அப்போதும் உன்னை நான்
அன்பாலே வென்றிடுவேன்.

முதுமை வராதா
மூர்ச்சை ஆகாதா
முதியோர் இல்லங்கள்.

என்று இறைவனை பிராத்திக்கும்
- hujja

.

எழுதியவர் : hujja (20-Nov-12, 11:37 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1050

மேலே