இப்போதாவது விழிப்போம் !

கரித்துகள் காறித்துப்பும்
வாகனங்கள் படைத்தோம் !
காற்றைக் கிழித்தோம் !
ஆக்சிஜன் முகத்தில்
கருப்படித்து - துருப்பிடிக்க
வைத்தோம் - நுகரும்
மூக்கிற்கே அடையாளம்
அறிய முடியாதபடி !

குளிர்சாதனம் படைத்தோம் !
சற்றே பெருத்த
குளிரூட்டப்பட்ட
குப்பைதொட்டியது !
அது வெளியிடும்
அதீத கழிவு - ஓசோன்
படலத்திற்கு உயிரோடு
பாடைகள் கட்டிற்று !
புறஊதா கதிர்களுக்கு
புறவாசல் திறந்துவிட்டு,
தின்று மகிழ்ந்தோம் !

வானத்தை நோக்கி - கான்கிரிட்
காடுகள் கட்டினோம் !
பூமியின் வயிறு குடைந்து
வணிக வளாகம் கட்டினோம் !
மையம் நோக்கி பயணப்பட்டோம்
இல்லா தண்ணீர் தேடி !
குடைந்துவிட்ட கூடாக
உடைந்துவிட்டது பூமி !

அணு உலைகள்
அடுப்பில் வைத்தோம் !
உணவாய் நம்மை நாமே
சமைத்து கொள்ள !
அணுகுண்டுகள் வெடிக்கும்போது
நகர்ந்த பூமித்தகடுகளை
கவனிக்க மறந்தோம் - மற்றோர்
கவனிக்க இறந்தோம் !

இயற்கைத் தாயின்
ஓவ்வோர் உறுப்பையும்
சிதைத்துவிட்டபின் - அவள்
சீறும் போது - திட்டிதீர்க்கிறோம் !
ஒவ்வாத ஒவ்வொன்றயும்
ஒன்றொன்றாய் செய்துவிட்டு,
செத்து மடிகிறோம் !
செவ்வனே மடிக்கிறோம் !!

மாயன்கள் சொன்னதில்
மாற்றங்கள் ஏதுமில்லை,
மடியப்போகிறோம் !
தாமதங்கள் தாமாகவோ
தவறாகவோ நிகழலாம் !
ஒவ்வோர் கணக்காய்
முடிக்க காலனுக்கு
அவகாசம் கொடுக்காமல்,
நம் சுவாசம் நிறுத்துவோம் !

மனித இனம்
நுனிக்கிளையில் அமர்ந்தபடி
அடிக்கிளை வெட்டும்
அறிவுச் சமூகம் !
இதயத்தை மறந்துவிட்டு
மூளையை முடுக்கிவிடுகையில்,
காலன் நம்மை நோக்கி - காலடியை
முன்னே வைக்கிறான் !

இயற்கைத் தாய்
இனியவள் !
இனி அவள் ? - கேள்விக்குறி
அவளைபற்றியதெனினும்
வழுக்கி விழும்
எதிர்காலம் நம்முடையது !

கிண்டியபின் கிடைத்த
நம் எலும்புக்கூடுகளை
சுட்டிகளுக்கு சுட்டிக் காட்டி
ஏதோ ஒரு மிருகம்
"இவன்தான் மனிதனாம்"
எனும் வாசகம் சொல்லும்
வழக்கத்தை வராமல் தடுப்போம் !
இப்போதாவது விழிப்போம் !

எழுதியவர் : வினோதன் (21-Nov-12, 2:36 am)
பார்வை : 151

மேலே